"மும்பை தாக்குதல் குற்றவாளிகளுக்கு எதிராக பாக்., நடவடிக்கையை கூர்ந்து கவனிப்போம்'
"மும்பை தாக்குதல் குற்றவாளிகளுக்கு எதிராக பாக்., நடவடிக்கையை கூர்ந்து கவனிப்போம்'
ADDED : ஜூலை 25, 2011 10:11 PM
புதுடில்லி : 'மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக, பாகிஸ்தான் அரசு எடுக்கும் நடவடிக்கைகளை, இந்தியா கூர்ந்து கவனிக்கும்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: பாகிஸ்தான் விவகாரத்தில், உள்துறை அமைச்சகத்துக்கும், வெளியுறவு அமைச்சகத்துக்கும் இடையே, எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை.
பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தப்படுவதை, நாங்கள் ஆதரிக்கிறோம். பல்வேறு விஷயங்களைப் பற்றி, பேச்சு நடத்துகிறோம். அதே நேரத்தில், கடந்த 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணையில், பாகிஸ்தான் சிறிய அளவில் தான் நடவடிக்கை எடுத்துள்ளது என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது, பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இது தொடர்பாக, பாகிஸ்தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை, கூர்ந்து கவனிப்போம். திம்புவில், பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக்கை சந்தித்த போது, மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது, கோர்ட் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.