ADDED : டிச 21, 2024 11:48 PM
மும்பை,: மும்பையில், சுற்றுலா பயணியர் சென்ற படகின் மீது, கடற்படையின் படகு மோதிய விபத்தில் மாயமான, 7 வயது சிறுவனின் சடலம், துறைமுகம் அருகே கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் கேட் வே ஆப் இந்தியாவில் இருந்து, அரபிக் கடலில் உள்ள எலிபென்டா தீவுக்கு தினசரி படகு போக்குவரத்து சேவை உள்ளது. கடந்த 18ம் தேதி பிற்பகல் 100க்கும் மேற்பட்ட பயணியருடன் 'நீல்கமல்' என்ற படகு எலிபென்டா தீவுக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது அதிவேகமாக சென்ற கடற்படை படகு, நீல்கமல் படகில் மோதியது. இதில் இருந்த பயணியர் பலர் கடலுக்குள் விழுந்தனர்.
கடற்படையினர், கடலோர காவல் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், பயணியர் படகில் சென்ற 10 பேர் மற்றும் கடற்படை வீரர்கள் மூவர் உயிரிழந்தனர். படகில் பயணித்த இரண்டு பேர் மாயமாகினர். இதையடுத்து, அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
கடந்த 19ம் தேதி, 43 வயது நபரின் உடல் மீட்கப்பட்டது. இந்நிலையில், மும்பை துறைமுக பகுதி அருகே 7 வயது சிறுவனின் உடலை கடற்படையினர் நேற்று மீட்டனர்.
இது, படகு விபத்தில், மாயமான கோவாவைச் சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்தது.
இந்த விபத்தில், ஏற்கனவே அவரது தாய் உயிரிழந்துவிட்டார்.