ADDED : நவ 03, 2024 11:52 PM
மும்பை: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிராவில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு, ஆளும் மஹாயுதி கூட்டணியில் உள்ள சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் பா.ஜ.,வை ஆதரித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்ய உள்ளார்.
இந்நிலையில், மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸாப் எண்ணுக்கு நேற்று முன்தினம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், 'அடுத்த 10 நாட்களுக்குள் முதல்வர் பதவியில் இருந்து விலகாவிட்டால், தேசியவாத காங்.,கைச் சேர்ந்த பாபா சித்திக்குக்கு ஏற்பட்ட நிலை, யோகி ஆதித்யநாத்துக்கு ஏற்படும்' என கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான பாபா சித்திக், கடந்த 12ம் தேதி பந்த்ரா பகுதியில், பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இந்த மிரட்டல் வந்தது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து உஷாரடைந்த போலீசார், மும்பை பயங்கரவாத எதிர்ப்பு படை உதவியுடன் விசாரணை நடத்தினர். இதில், தானே மாவட்டம் உல்ஹாஸ் நகரைச் சேர்ந்த பாத்திமா கான், 24, என்ற பெண் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
தகவல் தொழில்நுட்ப பிரிவில் இளங்கலை பட்டம் முடித்துவிட்டு குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர், மனநிலை சரியில்லாததால், இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பாத்திமாவை கைது செய்த போலீசார், அவரது குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.