ADDED : நவ 06, 2025 06:58 AM

மும்பை: மும்பையில், நேற்று நடந்த, 'மோனோ' ரயில் சோதனை ஓட்டத்தின் போது, ரயில் தடம் புரண்டு இரும்பு துாணில் மோதி சேதமடைந்தது.
மஹாராஷ்டிராவின் மும்பையில், நாட்டின் முதல், 'மோனோ' ரயில் திட்டம் துவங்கப்பட்டது. இதை மஹா மும்பை மோனோ ரயில் போக்குவரத்து நிறுவனம் இயக்குகிறது.
மோனோ ரயில் என்பது குறுகிய பாலத்தில் செல்லக்கூடியது. பாலத்தின் பக்கவாட்டில் உரு ளையான கம்பம் அமைக்கப்பட்டு, அதை மோனோ ரயிலின் சக்கரங்கள் தழுவியபடி நகரும். பார்ப்பதற்கு ரயில் தொங்கியபடி செல்வது போல் இருக்கும்.
இங்கு, 2014ல் முதற்கட்ட மோனோ ரயில் சேவை பயன்பாட்டுக்கு வந்தது. 2019ல் செம்பூர் முதல் சந்த் கார்கே மஹாராஜ் சவுக் வரை 20 கி.மீ., துாரத்திற்கு முழு சேவையும் துவங்கியது.
கடந்த சில மாதங்களாக மும்பை மோனோ ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக அடிக்கடி தடைபட்டது. ஆகஸ்ட் 19 மற்றும் செப்டம்பர் 15 தேதிகளில் பல இடங்களில் மோனோ ரயில் நடுவழியில் நின்றது. நுாற்றுக்கணக்கான பயணியர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதனால் செப்டம்பர் 20 முதல் மும்பையில் மோனோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில், நான்கு பெட்டிகள் உடைய, 10 மோனோ ரயில்களை புதிதாக மஹா மும்பை மோனோ ரயில் நிறுவனம் வாங்கியது. அதில் ஒரு ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று காலை 9:00 மணிக்கு வடாலா பணிமனையில் இருந்து துவங்கியது.
அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மோனோ ரயில் தடம் புரண்டு அந்தரத்தில் தொங்கியது.
இதில் முதல் பெட்டி கடுமையாக சேதமடைந்தது. இதில் மூன்று ஊழியர்கள் காயமடைந்தனர். ரயிலில் பயணியர் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

