ADDED : டிச 26, 2024 04:46 PM

மும்பை: மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதனை தக்கவைக்க, சிவசேனா உத்தவ் அணி தீவிரமாக உள்ளது.
மும்பை மாநகராட்சி நிர்வாகம் 25 ஆண்டுகளாக பிளவுபடாத சிவசேனா வசம் இருந்தது. மாநகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் முடிந்துவிட்டது. பல்வேறு காரணங்களால் 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. 2025-மார்ச்-ஏப்ரலில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், சிவசேனா உத்தவ் அணியின் தலைவர் உத்தவ் தாக்கரே, இன்று மும்பையில் தனது கட்சியின் நிலையை மதிப்பிடுவதற்கான மூன்று நாள் பயிற்சியைத் தொடங்கினார்,
2022 இல் பால் தாக்கரே நிறுவிய சிவசேனாவில் பிளவுக்குப் பிறகு, சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தல்கள், எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடியின் ஒரு அங்கமான உத்தவின் கட்சிக்கு பெரிய தோல்வி ஏற்பட்டது.
மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில், மஹா விகாஷ் கூட்டணி 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் உத்தவ் அணி 20 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
மும்பையில் உள்ள 36 சட்டசபை தொகுதிகளில், உத்தவ் சேனா 21 தொகுதிகளில் போட்டியிட்டு 10ல் வெற்றி பெற்றது.
உத்தவ் சேனா அணியின் மற்றொரு தலைவர் அனில் பராப் கூறுகையில், மும்பையின் 227 முனிசிபல் வார்டுகளிலும் தேர்தல் தயார்நிலையை உத்தவ் ஜி ஆய்வு செய்து வருகிறார். மூன்று நாட்களுக்கு இந்த ஆலோசனை நடைபெறும் என்றார்.