ஓடும் ரயிலில் சாகசம்; கையும் போச்சு, காலும் போச்சு: போலீஸ் விசாரணையில் அம்பலம்
ஓடும் ரயிலில் சாகசம்; கையும் போச்சு, காலும் போச்சு: போலீஸ் விசாரணையில் அம்பலம்
ADDED : ஜூலை 29, 2024 12:59 PM

மும்பை: ஓடும் ரயிலில் சாகசம் செய்யும் இளைஞரின் வீடியோ வைரலான நிலையில், அவரை கைது செய்ய சென்ற போலீசார், அவர் ஏற்கனவே விபத்தில் சிக்கி ஒரு கை, ஒரு காலை இழந்ததை கண்டு அதிர்ந்தனர். ரயிலில் சாகசம் செய்தபோது கை, காலை இழக்க நேரிட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
மஹாராஷ்டிர மாநிலம் வடாலாவிலுள்ள அன்டாப் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் பர்ஹத் ஷேக். இவர் ஓடும் ரயில்களில் கம்பியைப் பிடித்தபடி பிளாட்பார்மில் கால்கள் தேய்த்தபடி சாகசத்தில் ஈடுபடுவதுடன், அதனை வீடியோவாக எடுத்து, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து லைக்குகளை பெற்று வந்தார். இதே வேலையாக இருந்த பர்ஹத் ஷேக், ரயிலில் சாகசம் செய்யும் வீடியோ கடந்த சில நாட்களாக வைரலாக பரவியது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு போலீசார் (ஆர்பிஎப்) அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
அவரைக் கைது செய்வதற்காக பர்ஹத்தின் இருப்பிடத்தை கண்டுபிடித்து சென்றபோது ரயில்வே போலீசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு கை, ஒரு காலை இழந்து அமர்ந்திருந்த பர்ஹித்தை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் நடந்ததை விசாரித்தனர். மஸ்ஜித் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம், சாகசம் செய்தபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததும், அப்போது ரயில்வே ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததும், பலமாக அடிபட்டிருந்ததால் அவரது ஒரு கால், கையை மருத்துவர்கள் வெட்டி எடுத்ததாகவும் பர்ஹத் கூறினார்.
கை, காலை இழந்த பர்ஹத், ''யாரும் நான் செய்தது போல ஸ்டண்ட் செயல்களை செய்யவேண்டாம். இத்தகைய செயல்கள் இது சட்டவிரோதமானது மட்டுமல்ல, உயிருக்கு ஆபத்தானது'' என்றும் கூறியுள்ளார். லைக்குகளுக்கு சாகசம் என்ற பெயரில் உயிருடன் விளையாடும் இளைஞர்களுக்கு இச்சம்பவம் ஒரு பாடமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.