போலீஸ் ஜீப்பை சூறையாடிய கம்யூ., நிர்வாகிக்கு நகரில் தடை
போலீஸ் ஜீப்பை சூறையாடிய கம்யூ., நிர்வாகிக்கு நகரில் தடை
ADDED : மார் 15, 2024 01:29 AM
திருவனந்தபுரம்:கேரள மாநிலம், திருச்சூர் அருகே சாலக்குடியைச் சேர்ந்த நிதின் புல்லன், 48, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எப்.ஐ.,யின் தலைவராக உள்ளார். கடந்தாண்டு டிச., 22-ல் அப்பகுதியில் நடந்த மாணவர் பேரவை தேர்தலில், கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ., வெற்றி பெற்றது. இதை கொண்டாடும் வகையில் தொண்டர்கள் சாலையில் ஊர்வலம் வந்தனர்.
அப்போது போலீசாருக்கும், ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், போலீஸ் ஜீப் சூறையாடப்பட்டது. இது தொடர்பாக நிதின் புல்லனை போலீசார் கைது செய்தனர். சாலக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரை பலவந்தமாக மீட்டுச் சென்றனர்.
இந்நிலையில், நிதின் புல்லன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய திருச்சூர் டி.ஐ.ஜி., அஜிதா பேகத்துக்கு எஸ்.பி., நவநீத் சர்மா பரிந்துரைத்தார். அதன்படி, அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், ஆறு மாதங்களுக்கு அவர் திருச்சூர் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

