என்னை கொலை செய்ய சதி சிவகுமார் மீது முனிரத்னா 'பகீர்'
என்னை கொலை செய்ய சதி சிவகுமார் மீது முனிரத்னா 'பகீர்'
ADDED : மார் 20, 2025 12:37 AM

பெங்களூரு : ''என்னை கொலை செய்ய ஆறு மாதமாக துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷ், பெங்களூரு நகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹனுமந்தராயப்பா, அவரது மகள் குஸ்மா சதி செய்கின்றனர்,'' என்று, ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா 'பகீர்' குற்றச்சாட்டை தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஆர்.ஆர்.நகர் தொகுதி மக்களிடம் சென்று, தொகுதிக்கு இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது என்று, காங்கிரஸ் தொண்டர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். கடந்த ஆறு மாதமாக என்னை கொலை செய்ய, துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷ், பெங்களூரு நகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹனுமந்தராயப்பா, அவரது மகள் குஸ்மா சதி செய்கின்றனர்.
இதனால் தொகுதியில் நடமாடவே எனக்கு பயமாக உள்ளது. என் மீது முட்டை அடிக்கின்றனர்; கார் மீது கல் வீசுகின்றனர். எனக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. 'கன்மேன்' வழங்க அரசு மறுக்கிறது. இதற்கு சிவகுமார் தான் நேரடி காரணம்.
எங்கள் கட்சியின் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் கைதான, காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி பாதுகாப்புக்கு மூன்று கன்மேன் நியமிக்கப்பட்டு உள்ளனர். என் மீது பொய் பலாத்கார வழக்குப்பதிவு செய்து, சிறையில் தள்ளினர். இம்சை கொடுக்கின்றனர்.
பாதுகாப்பு கேட்டு கவர்னர், பெங்களூரு போலீஸ் கமிஷனர், ஐ.ஜி.,க்கு கடிதம் எழுதினேன். எதுவும் நடக்கவில்லை. இதனால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மனித உரிமைகள் ஆணையத்திற்கும் கடிதம் எழுதினேன்.
பாதுகாப்பு அளிக்க அரசுக்கு உத்தரவிட கோரி, உச்ச நீதிமன்றத்திலும் மனு செய்தேன். எனக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு அலட்சியமாக உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை, சபாநாயகரிடம் கொடுத்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.