ஆடியோவில் இருப்பது முனிரத்னா குரல் தான் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் உறுதி
ஆடியோவில் இருப்பது முனிரத்னா குரல் தான் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் உறுதி
ADDED : செப் 19, 2024 06:04 AM

பெங்களூரு: ''ஆடியோவில் இருப்பது 100க்கு 100 சதவீதம் முனிரத்னா குரல்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் கூறினார்.
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா. ஒப்பந்ததாரர் சலுவராஜு என்பவரை ஆபாசமாக பேசியதுடன், ஜாதியை சொல்லி திட்டியதாக முனிரத்னா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் பேசியதாக கூறப்படும் ஆடியோக்களும் வெளியாகின.
இதுகுறித்த புகாரில் வயாலிகாவல் போலீசார், முனிரத்னாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முனிரத்னாவை கண்டித்து பெங்களூரு கெங்கேரி ரயில் நிலையம் முன், கர்நாடக மகளிர் காங்கிரசார் நேற்று மவுன போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகரும் கலந்து கொண்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், கீழ்தரமாக பேச கூடாது. அப்படி பேசினால் பதவியில் இருக்கவே தகுதி இல்லை. ஒருவர் பேசும் பேச்சால், அனைவரும் இப்படி தான் இருப்பர் என்று, மக்கள் மனதில் எண்ணம் வந்து விடும். நானும், முனிரத்னாவும் 2013 முதல் 2023 வரை ஒன்றாக இருந்து உள்ளோம். ஆடியோவில் இருப்பது 100க்கு 100 சதவீதம் முனிரத்னா குரல் தான்.
போலீசார், ஆடியோவை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் தங்கள் கடமையை செய்கின்றனர்.
எனது தொகுதி மக்கள் என்னை சந்தித்து, ஆபாசமாக பேசிய முனிரத்னாவுக்கு எதிராக, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. நீங்களாவது எங்களுக்கு ஆதரவாக இருங்கள் என்று கேட்டு கொண்டனர்.
இதனால், காங்கிரஸ் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொண்டேன். பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் போல, பயந்து வாயை மூடி கொள்ளும் நபர் நான் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முனிரத்னாவும், சோமசேகரும் காங்கிரசில் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்கள். கடந்த 2019ல் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த 17 பேரில், இருவரும் அடங்குவர். யஷ்வந்த்பூரும், ஆர்.ஆர்.நகரும் பக்கத்து தொகுதிகள். தற்போது, சோமசேகர் பா.ஜ., மீது அதிருப்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.