ஒக்கலிகா சமூகம் குறித்த முனிரத்னா கருத்து பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு பாதிப்பு?
ஒக்கலிகா சமூகம் குறித்த முனிரத்னா கருத்து பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு பாதிப்பு?
ADDED : செப் 22, 2024 11:17 PM
ராம்நகர்: ஒக்கலிகா சமூகம் குறித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா பேசியது, சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 60. மாநகராட்சி ஒப்பந்ததாரரும், ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்தவருமான சலுவராஜு என்பவரிடம், மொபைல் போனில் பேசும் போது, ஒக்கலிகா சமூகம் குறித்து, அவதுாறாக பேசியதாக சொல்லப்படுகிறது.
சலுவராஜு அளித்த புகாரில், கைது செய்யப்பட்ட முனிரத்னாவுக்கு, அந்த வழக்கில் ஜாமின் கிடைத்தது. ஆனால், பலாத்கார வழக்கில் மீண்டும், சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒக்கலிகா சமூகம் பற்றி, அவதுாறாக பேசிய முனிரத்னாவுக்கு, ஒக்கலிகா சமூக மடாதிபதிகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும், போராட்டம் நடத்த வேண்டும் என்று, துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பியும், முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷ் ஆகியோர் துாண்டி விடுகின்றனர்.
ஒக்கலிகா சமூக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முனிரத்னாவுக்கு எதிராக பெரிய அளவில், போராட்டம் நடத்தவும் முடிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில், ஒக்கலிகா சமூகம் பற்றி, முனிரத்னா பேசியது சென்னப்பட்டணா இடைத்தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.
சென்னப்பட்டணாவில் வேட்பாளர்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில், ஒக்கலிகா சமூக ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. முனிரத்னா பேசியதை வைத்து, இடைத்தேர்தலில் காங்கிரஸ் பிரசாரம் செய்யும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் முனிரத்னா பேசியதால், தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று, சென்னப்பட்டணா பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் கூறுகின்றனர். சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் சார்பில், சுரேஷ் தான் போட்டியிட போகிறார்.
அவரை வெற்றி பெற வைப்பதற்காக, முனிரத்னா பேசியதை காங்கிரஸ் பயன்படுத்தலாம். ஆனால், முனிரத்னா இந்த பகுதியை சேர்ந்தவர் இல்லை.
மாண்டியா நாகமங்களாவில் நடந்த கலவரத்தை திசை திருப்ப, முனிரத்னாவை ஆயுதமாக காங்கிரஸ் பயன்படுத்துகிறது என்கின்றனர்.