ADDED : ஜன 31, 2024 01:42 AM

மூணாறு:மூணாறில் ஆண்டுதோறும் நவம்பரில் குளிர் காலம் துவங்கி பிப்ரவரி வரை நீடிக்கும். அப்போது டிசம்பர் இறுதி மற்றும் ஜன.15 க்குள் இரவு, காலை வேளையில் வெப்பம் மைனஸ் டிகிரி வரை குறைந்து உறைபனி ஏற்படும்.
இந்தாண்டு கடந்த மாதம் வரை மழை பெய்ததால் காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இம்மாதம் ஆரம்பத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பம் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைந்த போதும் மைனஸ் டிகிரியை எட்டவில்லை.
ஜன.26ல் காலையில் வெப்பம் 5 டிகிரியாக இருந்த நிலையில் அதன் பின் நேற்றுவரை கடந்த நான்கு நாட்களாக காலையில் வெப்பம் 4 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. பகலில் அதிகபட்ச வெப்பம் 16 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.
வெப்பம் வெகுவாக குறைந்ததால் மாலை 3:00 முதல் காலை 10:00 மணி வரை குளிர் நிலவுகிறது. அதேபோல் காலை, மாலையில் பனி மேகம் சூழ்ந்து இருளைப் போன்ற சூழலை ஏற்படுத்துகின்றது. மூணாறு அருகே குண்டளை அணையில் பனி மேகம் சூழ்ந்த மாறுபட்ட சூழலில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். எனினும் உறைபனி ஏற்படுவதற்கான காலம் கடந்தும் தட்ப வெப்ப நிலை போக்கு காட்டி வருவதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.