நுாறாண்டுகளுக்கு முன் இதே நாளில் இயற்கை பேரழிவை சந்தித்த மூணாறு
நுாறாண்டுகளுக்கு முன் இதே நாளில் இயற்கை பேரழிவை சந்தித்த மூணாறு
UPDATED : ஜூலை 15, 2024 06:42 AM
ADDED : ஜூலை 15, 2024 06:39 AM

மூணாறு: சுற்றுலா நகரான கேரள மாநிலம் மூணாறு நுாறாண்டுகளுக்கு முன் இதே நாளில்(1924 ஜூலை 15) இயற்கை பேரழிவை சந்தித்தது. ரயில், ரோப் வே சேவை இன்று வரை மீட்க முடியாததாக உள்ளது.
கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இம்மாநிலம் உருவாகும் முன் 1924 ல் வழக்கம் போல் துவங்கிய பருவ மழை ஜூலை 14 முதல் வலுவடைந்து இரு வாரங்களாக இடைவிடாமல் பெய்ததால் மலபார், கொச்சி, திருவிதாங்கூர் பகுதிகள் மூழ்கின.
சேதம், இறப்பு ஆகியவை முறையாக கணக்கிடப்படவில்லை. தகவல் தொழில் நுட்ப வசதிகள் இல்லாததால் ஏற்பட்ட பேரழிவை சில ஆதாரங்கள் மூலம் அறிய முடிந்தது.
மீண்டும் பேரழிவு
அத்தகைய பேரழிவை கேரள மக்கள் 2018ல் உணர்ந்தனர்.
அந்தாண்டு ஆகஸ்டில் பெய்த கனமழை பேரழிவை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் வெள்ளக் காடானது. நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளில் 450 பேர் பலியாகினர். 3,879 நிவாரண முகாம்களில் 3,91,494 குடும்பங்களை சேர்ந்த 14.57 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டனர். 2.53 லட்சம் வீடுகள் சிறிய அளவிலும், 15,272 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. சேத மதிப்பு ரூ.5,610 கோடி என கணக்கிடப்பட்டது.
தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், போக்குவரத்து, மீட்புப்பணிகளுக்கான வசதிகள் உள்பட அனைத்தும் இருந்தும் இயற்கையுடன் போட்டி போட இயலவில்லை. இந்த வசதிகள் இல்லாத 1924ல் ஏற்பட்ட பேரழிவை குறித்து விவரிக்க இயலாது.
மூணாறு பகுதியில் தேயிலை சாகுபடியில் இறங்கிய ஆங்கிலேயர் தமிழர்கள், மலையாளிகள் உழைப்பில் தேயிலை தோட்டங்கள், மூணாறு நகரை உருவாக்கினர். தேயிலை உள்ளிட்ட சரக்குகளை கையாள மூணாறு டாப் ஸ்டேஷன் இடையே குண்டளைவாலி எனும் ரயில், ரோப் வே சேவைகளையும் பயன்படுத்தினர்.
அழிந்தன
1924ல் ஜூலையில் மூன்று வாரங்களாக மூணாறில் பலத்த மழை பெய்தது.
அதில் மூணாறு அருகே மாட்டுபட்டியில் மலைகளுக்கு இடையே மரங்கள், கற்கள் ஆகியவை சிக்கி தடுப்பணை போன்று உருவாகியது.
அது உடைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மூணாறு நகர் இதே நாளில் (ஜூலை 15ல்) தண்ணீரில் மூழ்கி அழிந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. குண்டனை, பள்ளிவாசல் ஆகிய எஸ்டேட் பகுதிகளிலும் உருவான தடுப்பணைகள் உடைந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தின. ரயில் பாதை, ரோப் வே ஆகியவை முற்றிலுமாக சேதமடைந்து உருக்குலைந்தன.
மாங்குளம் பகுதியில் கரிந்திரிமலை இடிந்ததால் மூணாறில் இருந்து மாங்குளம், பெரும்பன் குத்து பூயம்குட்டி, குட்டம்புழா வழியாக எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவிற்கு சென்ற ரோடு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
அதன் பிறகு 1931ல் மூணாறில் இருந்து அடிமாலி, நேரியமங்கலம் வழியாக புதிய ரோடு அமைக்கப்பட்டது. மழை ஏற்படுத்திய பேரழிவில் உயிர் சேதம் அதிகம் ஏற்பட்டபோதும் அதிகாரபூர்வமாக கணக்கிடப்படவில்லை. பேரழிவில் அழிந்த நகரை ஆங்கிலேயர் இரண்டு ஆண்டுகளில் சீரமைத்தனர். ஆனால் நூறு ஆண்டுகள் ஆகியும் ரயில், ரோப் வே ஆகியவை சீரமைக்க இயலாமல் அழிந்து போனது.
சாட்சி
மழையில் சேதமடைந்த ரயில் தண்டவாளங்களை ஆங்கிலேயர் மின்கம்பங்களாக பயன் படுத்தினர். அவை மூணாறில் ரயில் ஓடியதை நினைவு கூறும் சாட்சியாக உள்ளன. மூணாறில் செயல்பட்ட ரயில் நிலையம் தற்போது தனியார் தேயிலை கம்பெனி தலைமை அலுவலமாக செயல்படுகிறது.
99ம் ஆண்டு
இந்த பேரிடர் 1924ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது மலையாளம் கொல்லம் ஆண்டு 1099 என்பதால் 99 ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு என கேரளாவில் அழைக்கப்படுகிறது.
மழை பேரழிவு
கேரளாவில் 1939, 1961, 2018 ஆண்டுகளிலும் கனமழை பேரழிவை ஏற்படுத்தியபோதும் 1924ல் ஏற்பட்ட கடும் பேரழிவுக்கு நிகரானது அல்ல என அறிஞர்கள் கூறுகின்றனர். 1924, 2018 ஆண்டுகளில் பெய்த மழை அளவை ஒப்பிட்டு அரசு பேரழிவு காலண்டரை தயாரித்தது. 1924ல் மழையை அளவீடு செய்ய போதிய வசதி இல்லை என்றபோதும் கிடைத்த தரவுகளை ஒப்பிட்டு கணக்கிட்டனர்.
மாநிலத்தில் ஜூன் ஒன்று முதல் செப்டம்பர் 30 வரை சராசரி மழை 2039.6 மி.மீ., மழை பெய்யும்.
இந்த கால அளவில் 1924ல் 3463. மி.மீ., மழை பெய்தாக கணக்கிடப்பட்டுள்ளது. இதே கால அளவில் 2018ல் 2517.2 மி.மீ., மழை பெய்தது. இது 2018ம் ஆண்டை விட 945.9 மி.மீ., அதிகம் என்பதால் 1924ல் பெய்த மழையின் தாக்கத்தை புரிந்து கொள்ளலாம்.