மூணாறில் கல்லூரி மாணவர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து; 3 பேர் உயிரிழப்பு
மூணாறில் கல்லூரி மாணவர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து; 3 பேர் உயிரிழப்பு
ADDED : பிப் 19, 2025 06:50 PM

மூணாறு: கேரளாவின் மூணாறுக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்களின் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 மாணவிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் என 45 பேர் பஸ்ஸில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். மூணாறில் இருந்து வட்டவாடகைக்கு செல்லும் சாலையில் எக்கோ பாயிண்ட் பகுதியில் அதிவேகமாக வந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பயணித்த மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், இரு மாணவிகள் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மாணவன் ஒருவனும் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.