காரில் பைக் உரசியதால் கொலை சாக்கடையில் சடலம் வீச்சு
காரில் பைக் உரசியதால் கொலை சாக்கடையில் சடலம் வீச்சு
ADDED : மே 02, 2025 01:27 AM
பக்கர்வாலா: காரில் மோட்டார் சைக்கிள் லேசாக உரசியதால் ஏற்பட்ட மோதல், கொலையில் முடிந்தது.
பக்கர்வாலா பகுதியில் வடிகால்வாயில் ஆண் சடலம் வீசப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், 40 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் வடிகால்வாயில் வீசப்பட்ட சடலம், கோபால் நகரின் சுருக்பூர் சாலையில் வசித்த ஜக்விந்தர் சிங்கானியா, 40, என்பவருடையது என்பது தெரிய வந்தது.
கடந்த மாதம் 14ம் தேதி முதல் அவரை காணவில்லை என, பாபா ஹரிதாஸ் நகர் போலீசில் அவரது மனைவி புகார் அளித்திருந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் நஜாப்கர் அருகே ஜக்விந்தரின் மோட்டார் சைக்கிள் அநாதையாக நிற்பதை கண்டுபிடித்தனர். அந்த பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது,
மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு ஜக்விந்தர் சிங்கானியா சென்ற மோட்டார் சைக்கிள் ஒரு கார் மீது லேசாக உரசியதும், இதனால் சிங்கானியாவின் மது பாட்டில்கள் உடைந்ததும் தெரிந்தது.
காரில் வந்தவருக்கும் ஜக்விந்தருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, காரில் சிங்கானியா ஏறிச் சென்றது தெரிய வந்தது.
காரை கண்டுபிடித்த போலீசார் தனியார் வங்கியில் காசாளராக வேலை செய்யும் பாப்ரோலாவைச் சேர்ந்த ரோஹித் குமார் சிங், 28, என்பவரை கைது செய்தனர்.
சமாதானம் பேசலாம் என்று கூறி ஜக்விந்தரை அழைத்துச் சென்று, மது வாங்கிக் கொடுத்து கொலை செய்தது, விசாரணையில் தெரிய வந்தது. பின் சடலத்தை கழிவுநீர் கால்வாயில் வீசிச் சென்றதாக போலீசில் ரோஹித் குமார் கூறினார்.