ADDED : அக் 25, 2024 10:57 PM

மங்களூரு : கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்தவர், 30 ஆண்டுகளுக்கு பின் போலீசாரிடம் சிக்கினார்.
தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரு சுரத்கல்லின் பாளா கிராமத்தில் எம்.ஆர்.பி.எல்., டவுன்ஷிப்பில், அப்துல்லா என்பவரின் ரக்ஷக் இண்டஸ்ட்ரியல் தொழிற்சாலை உள்ளது. இங்கு நாராயணா, சுரேஷ், ரேவண்ணா செக்யூரிட்டிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். 'ஷிப்ட்' அடிப்படையில் பணியாற்றி வந்தனர்.
கடந்த 1995 மார்ச் 12ம் தேதி இரவு 10:30 மணியளவில், நாராயணா பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அறிமுகமில்லாத மூவர், தொழிற்சாலை அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடினர். அவர்களை பார்த்த நாராயணா, 'நீங்கள் யார், இங்கு எதற்காக வந்தீர்கள்?' என, விசாரித்தார்.
இதனால் அவருக்கும், அந்த நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து, கைகலப்பு ஏற்பட்டது. அப்போது நாராயணாவை கொலை செய்துவிட்டு அவர்கள் தப்பியோடினர்.
இது தொடர்பாக, ஹுடுகலு போலீசார் விசாரித்தனர். ஆனால், எவ்வளவு முயற்சித்தும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின் வழக்கு சி.சி.பி.,க்கு மாற்றப்பட்டது.
அதிகாரிகள் பல கோணங்களில் விசாரணை நடத்தினர். கொலையாளிகள் கேரளாவை சேர்ந்த அச்சன் குஞ்சி, ஜோஸ் குட்டி உட்பட மூவர் என்பதை கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்ய தேடினர்.
கொலையாளிகளில் ஒருவரான ஜோஸ் குட்டி, 60, கேரளா, எர்ணாகுளத்தின், திரிப்புளித்துரம் என்ற இடத்தில் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற சி.சி.பி., போலீசார், நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். மங்களூருக்கு அழைத்து வந்தனர். தற்போது நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
கொலையில் தொடர்புள்ள அச்சன் குஞ்சி, எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடுகின்றனர். 30 ஆண்டுகளுக்கு பின் வழக்கை கண்டுபிடித்து, குற்றவாளியை கைது செய்த சி.சி.பி., போலீசாரை, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் பாராட்டினார்.