தாய், 2 பிள்ளைகள் இறந்த வழக்கு கொலை செய்த கள்ளக்காதலன் கைது
தாய், 2 பிள்ளைகள் இறந்த வழக்கு கொலை செய்த கள்ளக்காதலன் கைது
ADDED : ஜன 08, 2024 06:53 AM
ஹாசன்: தாய், இரண்டு பிள்ளைகள் இறந்த வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. பணம் கொடுக்க மறுத்ததால், கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
ஹாசன் தாசரகொப்பலுவை சேர்ந்தவர் தீர்த்தபிரசாத், 35. இவரது மனைவி சிவம்மா, 33. மகன் பவன், 10, மகள் சிஞ்சனா, 8. துமகூரில் பேக்கரியில் தீர்த்தபிரசாத் வேலை செய்தார். மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி சிவம்மா, பவன், சிஞ்சனா ஆகியோர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
வீடு முழுதும், காஸ் சிலிண்டர் நெடி பரவி இருந்தது. காஸ் சிலிண்டரை திறந்து விட்டு, நெடியை சுவாசித்து குழந்தைகளுடன், சிவம்மா தற்கொலை செய்து இருக்கலாம் என்று, போலீசார் நினைத்தனர்.
'ரீல்ஸ்' வீடியோ
ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், தாயும், பிள்ளைகளும், கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரிந்தது.
சிவம்மா 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவதை, வழக்கமாக வைத்திருந்தார். இதனால் 'ரீல்ஸ்' வீடியோ மூலம் பழக்கமான, ஆண் நண்பர்களால் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.
சிவம்மாவின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்ததில், விஜயபுராவை சேர்ந்த நிங்கப்பா, 35, என்பவருடன், அடிக்கடி பேசியது தெரிந்தது.
நேற்று முன்தினம் இரவு விஜயபுரா சென்ற ஹாசன் போலீசார், நிங்கப்பாவை பிடித்து விசாரித்தனர். சிவம்மா, அவரது பிள்ளைகளை கொன்றதை ஒப்புக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்காதல்
சிவம்மாவின் கணவர் தீர்த்தபிரசாத்தும், நிங்கப்பாவும் விஜயபுராவில் பேக்கரி வைத்திருந்தனர். இதனால் நிங்கப்பாவும், சிவம்மாவுடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் அடிக்கடி சந்தித்து, உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் பேக்கரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தீர்த்தபிரசாத் குடும்பத்துடன் ஹாசன் தாசரகொப்பலுவுக்கு குடியேறினார்.
துமகூரில் பேக்கரியில் வேலை செய்தார். ஆனாலும் சிவம்மாவுக்கும், நிங்கப்பாவுக்கும் கள்ளக்காதல் நீடித்தது. மாதத்திற்கு ஒரு முறை தாசரகொப்பலு வந்து, சிவம்மாவுடன் உல்லாசமாக இருந்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி இரவும், சிவம்மா வீட்டிற்கு, நிங்கப்பா வந்து உள்ளார். பணக்கஷ்டத்தில் இருப்பதாகவும், பணம் தந்து உதவும்படியும் சிவம்மாவிடம், நிங்கப்பா கேட்டு உள்ளார். அதற்கு அவர் மறுத்து உள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில், சிவம்மா கழுத்தை நெரித்து, நிங்கப்பா கொலை செய்தார். இதை, சிவம்மாவின் பிள்ளைகள் பார்த்து விட்டனர்.
வெளியே சொல்லி விடுவர் என்ற பயத்தில், சிறிதும் இரக்கமின்றி அவர்களின் கழுத்தையும் நெரித்து, நிங்கப்பா கொன்று உள்ளார். பின், கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றதும், போலீஸ் விசாரணையில் தெரிந்தது.