ஹாரன் அடித்தால் இசை ஒலிக்கும்: நிதின் கட்கரி புதிய திட்டம்
ஹாரன் அடித்தால் இசை ஒலிக்கும்: நிதின் கட்கரி புதிய திட்டம்
ADDED : ஏப் 23, 2025 05:00 AM

புதுடில்லி : வாகனங்கள் ஒரு பக்கம் காற்று மாசை ஏற்படுத்துவதுடன், ஒலி மாசையும் ஏற்படுத்துகின்றன. இந்த மாசில் இருந்து விடுதலை தரும் புதிய திட்டத்தை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: நாட்டில் ஏற்படும் காற்று மாசில், 40 சதவீதம், வாகனங்களால் ஏற்படுகிறது. வாகனங்கள் ஏற்படுத்தும் காற்று மாசை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பசுமை எரிபொருள்கள் பயன்படுத்துவதுடன், எத்தனால், மெத்தனால் போன்றவற்றை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. ஒலி மாசை குறைக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளோம். அதன்படி, வாகனங்களில் ஹாரன்களில், இனி இந்திய இசைக் கருவிகளின் இசையே ஒலிக்க வேண்டும்.
புல்லாங்குழல், தபேலா, வயலின், ஹார்மோனியம் போன்ற இசைக் கருவிகளால் உருவாக்கப்படும் இசையே, ஹாரனாக பயன்படுத்த வேண்டும். இதனால், ஒலி மாசு குறைவதுடன், பயணங்கள் மனதுக்கு இதமளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.