புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முஸ்லிம் அமைப்பு தடை உத்தரவு
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முஸ்லிம் அமைப்பு தடை உத்தரவு
ADDED : டிச 31, 2024 12:57 AM

பரேலி, 'புத்தாண்டு கொண்டாட்டங்களில் இஸ்லாமியர்கள் பங்கேற்க வேண்டாம்' என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் மவுலானா அமைப்பின் தலைவர் ஷஹாபுதின் ரஸ்வி தெரிவித்துள்ளார்.
இன்றுடன், 2024ம் ஆண்டு நிறைவடைந்து, 2025 புத்தாண்டாக நாளை பிறக்க உள்ளது. இதையொட்டி உலகம் முழுதும் பல்வேறு சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
நம் நாட்டிலும் பிறக்கப் போகும் புத்தாண்டை மகிழ்ச்சி பொங்க வரவேற்க பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் ஜமாத் மவுலானா தலைவர் ஷஹாபுதின் ரஸ்வி, 'இஸ்லாமியர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டாம்' என, வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்வா எனப்படும் தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
புத்தாண்டு கொண்டாட்டங்கள் முஸ்லிம்கள் பெருமைப்படவோ, கொண்டாடவோ வேண்டிய விஷயம் அல்ல. இந்த கொண்டாட்டங்கள் கிறிஸ்துவ மரபுகளில் வேரூன்றியவை. புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடல், பாடல் போன்ற செயல்பாடுகளும் நடக்கும். சந்தேகத்திற்கு இடமின்றி, அவை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த செயல்கள் ஷரியாவுக்கு எதிரானது என்பதால், முஸ்லிம்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடக்கூடாது. இத்தகைய கொண்டாட்டங்கள் இஸ்லாமிய விழுமியங்களை களங்கப்படுத்துகின்றன.
இந்த பாவமான செயல்களில் இருந்து இஸ்லாமிய இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும். புத்தாண்டு விருந்து என்பது இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானது. இந்த கொண்டாட்டங்களில் இஸ்லாமியர்கள் பங்கேற்க கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.