பொட்டு வைக்க தடை விதிப்பீர்களா? ஹிஜாப் தடை வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி
பொட்டு வைக்க தடை விதிப்பீர்களா? ஹிஜாப் தடை வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி
ADDED : ஆக 09, 2024 05:51 PM

புதுடில்லி: மும்பையில் கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பெண்கள் பொட்டு வைக்க தடை விதிப்பீர்களா? என கேள்வி எழுப்பி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த என்ஜி ஆச்சார்யா மற்றும் டிகே மராத்தகா கல்லூரி வளாகத்தில் ஹிஜாப், நிஜாப் உள்ளிட்டவை அணிய தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து 9 மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: என்ன அணிய வேண்டும் எனக்கூறும் நீங்கள் எப்படி பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறீர்கள். பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பதை அவர்களிடம் விட்டுவிட வேண்டும். அது அவர்களின் முடிவு. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இதுபோன்று தடை விதிப்பது துரதிர்ஷ்டவசமானது. கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும். இந்த உத்தரவை தவறாக பயன்படுத்தக்கூடாது.முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது எனச் சொல்வது போல் மற்ற பெண்களை பொட்டு வைக்கக்கூடாது, திலகம் வைக்கக்கூடது என்று உங்களால் சொல்ல முடியுமா? அவற்றை உங்களால் தடை செய்ய முடியுமா? என கேட்டனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், மனுதாரர்கள் கோரிக்கை ஏற்று ஹிஜாப் மற்றும் புர்கா அணிய அனுமதி வழங்கினால், மற்ற மாணவிகள், அரசியல் முயற்சியாக காவி நிறத்திலான ஷால் அணிவார்கள். இது நடக்கக்கூடாது. 441 முஸ்லிம் மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். அவர்களுக்கும் மற்று மாணவிகளுக்கு இடையே வேறுபாடு ஏற்பட்டுவிடக்கூடாது. ஹிஜாப் மற்றும் புர்காவை மாற்ற தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
இதற்கு நீதிமன்றம், ‛‛ நீங்கள் சொல்வது சரி. ஆனால், அவர்களின் குடும்பத்தினர் அணிய கூறுகின்றனர். அதனால், அவர்கள் அணிகின்றனர். ஆனால், அனைவரும் ஒன்றாக படிக்க வேண்டும் என தெரிவித்தது.
தொடர்ந்து கல்லூரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்களின் மதம் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதற்கு நீதிமன்றம், மாணவர்களின் பெயர் மூலம் அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்துவிடுமே அப்படியானால், அதற்கு மாற்றாக எண்களை வைத்து அழைப்பீர்களா? மத பேதமின்றி அனைத்து மாணவர்களும் இணைந்து படிக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தது.
அதேநேரம், உடலை முழுமையாக மறைக்கும் வகையிலான பர்தா போன்ற ஆடைகளை மாணவிகள் அணிந்து வர விதிக்கப்பட்ட தடை தொடரும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை நவ.,மாதம் ஒத்திவைத்தனர்.