ADDED : ஜன 12, 2024 11:09 PM
பெங்களூரு: உருமாறிய கொரோனா தொற்று பரவல், கர்நாடகாவில் தான் அதிகமானோருக்கு பரவியது உறுதியாகி உள்ளது.
உலக மக்களிடையே 2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. லட்சகணக்கான மக்கள், தங்கள் உறவினர்கள், நண்பர்களை இழந்தனர்.
தடுப்பூசி செலுத்திய பின், கொரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக ஜே.என்.1 என்ற உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
நாடு முழுதும், 16 மாநிலங்களில் 1,013 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பரவியுள்ளது. இதில், அதிகபட்சமாக கர்நாடகாவில், 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உருமாறிய கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவை இல்லை என்று அரசு தரப்பில் தொடர்ந்து கூறப்படுகிறது. அதே வேளையில் எச்சரிக்கை அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டோர், வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோருக்கு கர்நாடகாவில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இத்தகையோர் முன்னெச்சரிக்கையாக முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொடர்பாக ஊடகத்தினருக்கு தினமும் விளக்கம் அளிக்க, தொழில்நுட்ப குழு தலைவர் ரவியை, சுகாதார துறை கமிஷனர் ரந்தீப் நேற்று நியமித்துள்ளார்.