சண்டை இன்னும் முடியல...! மீண்டும் வருவேன் என்கிறார் வினேஷ்
சண்டை இன்னும் முடியல...! மீண்டும் வருவேன் என்கிறார் வினேஷ்
ADDED : ஆக 18, 2024 10:28 AM

சண்டிகர்: தமது பதக்க வேட்டை இன்னமும் முடியவில்லை, மீண்டும் யுத்தத்துக்கு தயாராக போவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உறுதிபட கூறியுள்ளார்.
எடையால் தடை
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் மல்யுத்தம் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எதிர்பாராத இந்த நடவடிக்கையால் அவரது பதக்கம் பெறும் கனவு நிறைவேறாமல் போனது.உற்சாக வரவேற்பு
ஏமாற்றத்துக்கு ஆளான வினேஷ் போகத், மல்யுத்தத்தில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். பாரிசில் இருந்து தாயகம் திரும்பிய அவருக்கு புதுடில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக ஹரியானா மாநிலத்தில் உள்ள தமது சொந்த கிராமமான, பத்லிக்குச் சென்றார்.ஆழமான காயம்
அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த ஒலிம்பிக் தொடர் எனக்கு மிகவும் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விட்டது. அந்த காயம் குணம் அடைய சிறிதுகாலம் பிடிக்கும். ஆனாலும் எனது நாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.போராட்டம் தொடரும்
எனது சண்டை இன்னமும் முடியவில்லை. அது ஒரு நீண்ட ஒரு யுத்தம், கடந்த ஒரு வருடமாக போராடி வருகிறேன். அதில் ஒரு பகுதியைத் தான் தாண்டி வந்திருக்கிறேன், போராட்டம் தொடரும் என்று கூறி உள்ளார்.

