மியான்மர் எல்லையில் வேலி; பழங்குடியினர் கடும் எதிர்ப்பு
மியான்மர் எல்லையில் வேலி; பழங்குடியினர் கடும் எதிர்ப்பு
ADDED : ஜன 29, 2024 04:45 AM

இம்பால்: மணிப்பூரில் இந்திய - மியான்மர் எல்லை பகுதியில் வேலி அமைப்பதற்கு மணிப்பூர் பழங்குடியினர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் மியான்மர் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வருவது தொடர்கதையாக உள்ளது.
நம் நாட்டின் அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்கள் மியான்மருடன், 1,643 கி.மீ., எல்லையை பகிர்கின்றன.
சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய - - -மியான்மர் எல்லையில், இந்திய- - வங்கதேச எல்லையைப் போன்று முள்கம்பி தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த பணி, எல்லை சாலைகள் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மணிப்பூரின் மோரே பகுதியில், 10 கி.மீ., எல்லையில் முள்வேலி கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேலும் முள்வேலி கம்பிகள் அமைக்க மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அங்குள்ள பூர்விக பழங்குடியினர் தலைவர்கள் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.
இதன் முடிவில், இந்திய - மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது இருநாட்டு பழங்குடியினர் இடையிலான சுதந்திரமான நடமாட்டத்தை தடுக்கும் என கூறிய அவர்கள், மியான்மர் அதிகாரிகளுடனும் இதுகுறித்து பேச உள்ளதாக தெரிவித்தனர்.