மிசோரமில் இரண்டாக உடைந்த மியான்மர் ராணுவ விமானம்: 6 பேர் காயம்
மிசோரமில் இரண்டாக உடைந்த மியான்மர் ராணுவ விமானம்: 6 பேர் காயம்
ADDED : ஜன 23, 2024 01:54 PM

அயிஸ்வால்: இந்தியாவில் அடைக்கலம் புகுந்த மியான்மர் ராணுவ வீரர்களை அழைப்பதற்காக வந்த அந்நாட்டு ராணுவ விமானம், மிசோரமில் தரையிறங்கிய போது ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. அதில், விமானத்தில் உடற்பகுதி இரண்டாக உடைந்தது.
நமது அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அங்கு, ராணுவத்தினருக்கும், ஆயுத குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனால், அந்நாட்டு ராணுவ வீரர்கள் மிசோரமில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் மட்டும் 276 வீரர்கள் எல்லை தாண்டினர். நேற்று( ஜன.,22) மட்டும் 184 பேர் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதாக அசாம் ரைபிள்ஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எஞ்சிய ராணுவ வீரர்களை மீட்க அந்நாட்டு ராணுவ விமானம் ஒன்று மிசோரம் மாநிலத்தில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. அதில் விமானத்தின் உடற்பகுதி இரண்டாக உடைந்தது. விமானத்தில் இருந்த 14 பேரில் 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

