ADDED : ஜூன் 11, 2024 04:32 AM

மைசூரு:
சொத்து பிரச்னை காரணமாக, மைசூரு அன்னதானேஸ்வரா மடாதிபதி சிவானந்த சுவாமிகளை, அவரது உதவியாளரே, கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மைசூரு, சித்தார்த்நகர் அருகே உள்ள பன்னுார் சாலையில், அன்னதானேஸ்வரா மடம் அமைந்துள்ளது. இதன் மடாதிபதியாக இருந்தவர் சிவானந்த சுவாமிகள், 90.
மைசூரு உடையார் மன்னர்கள் வழங்கிய 9 ஏக்கர் நிலத்தில், அன்னதானேஸ்வரா மடம் செயல்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த இடத்தின் ஒரு பகுதியில் தங்கள் உறவினர்களுக்கு மடாதிபதி வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக, மடாதிபதி மீது பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது. நிலம் வழங்குவதாக கூறி, சிலரிடம் பணம் பெற்று, ஏமாற்றியதாக அவர் மீது 2011ல் வழக்கும் பதிவானது.
ரவி, 60, என்பவர் நீண்ட காலமாக மடாதிபதியின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். அவரது அனைத்து விவகாரங்களையும் செய்து வந்தார். சொத்து தொடர்பாக, மடாதிபதிக்கும், ரவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மது போதையில் இருந்த ரவி, நேற்று காலை புற்கள் அறுக்கும் நீண்ட ஆயுதத்தால், மடாதிபதியின் கழுத்தை அறுத்து பயங்கரமாக கொலை செய்துள்ளார்.
மடத்துக்கு வந்து பக்தர்கள் பார்த்தபோது விஷயம் பகிரங்கமானது. உடனே அவரது பக்தர்கள் ஏராளமானோர் மடத்தை சூழ்ந்தனர். தகவலறிந்த துணை போலீஸ் கமிஷனர் முத்துராஜ், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
தப்பியோட முயன்ற ரவியை போலீசார் கைது செய்தனர். மைசூரில் பட்டபகலில் ஒரு மடாதிபதியை அவது உதவியாளரே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நஜர்பாத் போலீசார் விசாரிக்கின்றனர்.

