மைசூரு தொகுதி பா.ஜ., 'சீட்' பாஸ்கர் ராவ் - சிம்ஹா தீவிரம்
மைசூரு தொகுதி பா.ஜ., 'சீட்' பாஸ்கர் ராவ் - சிம்ஹா தீவிரம்
ADDED : பிப் 26, 2024 07:07 AM

கர்நாடக அரசியல் கட்சிகள், லோக்சபா தேர்தலில் பரபரப்பாக உள்ளன. அந்தந்த கட்சியில் சீட் எதிர்பார்க்கும் தலைவர்கள், மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்க, என்ன செய்யலாம் என, ஆலோசிக்கின்றனர்.
இதற்கிடையில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி பாஸ்கர் ராவ், மைசூரு லோக்சபா தொகுதியில் பா.ஜ., சீட் எதிர்பார்க்கிறார். ஆம் ஆத்மியில் இருந்து, பா.ஜ.,வில் இணைந்த பாஸ்கர் ராவ், சட்டசபை தேர்தலில் பெங்களூரின், சாம்ராஜ்பேட் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.
தற்போது மைசூரு லோக்சபா தொகுதியில், சீட் எதிர்பார்க்கிறார். மைசூரில் பிராமணர் சங்கங்களுடன், நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். தான் மைசூரை சேர்ந்தவர் என, கூறி பிராமணர் சமுதாயத்தினர் ஆதரவை திரட்டுகிறார். போலீஸ் துறையில் தான் செய்துள்ள சாதனைகளை விவரித்துள்ளார்.
மைசூரு தொகுதியில், இதுவரை பிராமணர் சமுதாயத்தை சேர்ந்த எம்.பி., இல்லாததால், இம்முறை லோக்சபா தேர்தலில் அதே சமுதாயத்தை சேர்ந்த பாஸ்கர் ராவுக்கு, சீட் கொடுக்கும்படி பிராமணர் சமுதாய பிரதிநிதிகள், பா.ஜ., மேலிடத்திடம் வேண்டுகோள் விடுக்க முடிவு செய்துள்ளனர்.
இன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, கடந்த 10 ஆண்டுகளில் தொகுதி எம்.பி.,யாக, தான் செய்துள்ள சாதனைகளை விவரிக்கும் கையேடு வெளியிட்டுள்ளார்.
தனக்கு ஆதரவாக நிற்க, பிராமணர் சமுதாயத்தினரை ஒன்று சேர்க்க, அவர் முயற்சிக்கிறார்.
இதே தொகுதியில், 2019ல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோற்ற விஜயசங்கர், பா.ஜ.,வில் இணைந்தார். தற்போது இவரும் கூட, மைசூரு லோக்சபா தொகுதியில் போட்டியிட, ஆர்வம் காண்பிக்கிறார்.- நமது நிருபர் -

