கழிவுப்பொருட்களுக்கு கலை வடிவம் கொடுக்க மைசூரு மாநகராட்சி திட்டம்
கழிவுப்பொருட்களுக்கு கலை வடிவம் கொடுக்க மைசூரு மாநகராட்சி திட்டம்
ADDED : செப் 24, 2024 07:23 AM
மைசூரு: பொதுமக்கள் தேவையின்றி வீசியெறியும் பொருட்களை, மறுசுழற்சி செய்து கலைப்பொருட்களாக மாற்ற, மைசூரு மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது.
மைசூரு மாநகராட்சி சுற்றுச்சூழல் பிரிவு பொறியாளர் மிருதுஞ்செயா கூறியதாவது:
துாய்மை ஆய்வு விரைவில் துவங்கவுள்ளது. துாய்மை நகர் பட்டத்தை வெல்ல, மைசூரு மாநகராட்சி தயாராகி வருகிறது. முதற்கட்டமாக குப்பை பிரச்னைக்கு தீர்வு காண்கிறது.
பொதுமக்கள் தேவையின்றி வீசியெறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டயர், துணி, எலக்ட்ரிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய மைசூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் இந்துாரில் அங்குள்ள மாநகராட்சி 'டிரிபல் ஆர் சென்டர்' திறந்துள்ளது.
இங்கு மக்கள் வீசியெறிந்த பொருட்களை கொண்டு அழகான பொம்மை, டைல்ஸ், விளையாட்டுப் பொருட் கள், ஸ்டீல் தட்டு, தம்ளர், மேட், பூந்தொட்டி, கலைப்பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் என, பலவிதமான பொருட்கள் தயாரிக்கின்றனர்.
இந்துாரின் டிரிபல் ஆர் சென்டர்களை, மைசூரு மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். இதுபோன்று மைசூரின் ஏழு இடங்களில், டிரிபல் ஆர் சென்டர்கள் அமைக்கப்படும்.
பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படாத பழைய துணி, டயர், எலக்ட்ரிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை, இந்த சென்டர்களில் ஒப்படைக்கலாம்.
இப்பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படும். பயனுள்ள பொருட்களாக மாற்றப்படும்.
திடக்கழிவு நிர்வகிப்புக்கு, 15வது நிதி திட்டத்தின் கீழ் கிடைத்துள்ள 30 லட்சம் ரூபாயை, மறுசுழற்சி திட்டத்துக்கு பயன்படுத்த, மைசூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்துக்கு மாவட்ட கலெக்டரும், ஒப்புதல் அளித்துள்ளார். டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்தகைய சென்டர்கள் குவெம்பு நகர், ஜெ.பி.நகர், சரஸ்வதிபுரம் உட்பட ஏழு இடங்களில் திறக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.

