ADDED : பிப் 14, 2025 05:34 AM

மைசூரு நகரில் உள்ள மகாதேஸ்வரா லே - அவுட்டை சேர்ந்தவர் கல்பனா குட்டப்பா. இவரது பெற்றோர் முக்கதிர ரவி குட்டப்பா - சுவாதி. இவர் தன் 4 வயதில் இருந்தே ஸ்கேட்டிங்கில் ஆர்வமாக இருந்து வந்தார். இதை பார்த்த அவரது பெற்றோரும், அவருக்கு பச்சைக் கொடி காட்டி, பயிற்சியில் சேர்த்து உள்ளனர்.
தன் பள்ளிப்பருவத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வாங்கி குவித்து உள்ளார். பள்ளி அளவில் சாதித்தால் மட்டும் போதாது அல்லவா; மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றார்.
பள்ளி படிப்பை முடித்தவர், மைசூரில் உள்ள கிரைஸ்ட் கல்லுாரியில் சேர்ந்தார்.
அப்போது, தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் இவரது பெயர் கல்லுாரி அளவில் மிகவும் பிரபலமானது. மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று 50 தங்கப்பதக்கங்களை வாங்கி உள்ளார்.
மேலும், இவர் என்.சி.சி.,யிலும் சேர்ந்து பயிற்சி பெற துவங்கி உள்ளார். 2022ல், அர்ஜென்டினாவில் நடந்த உலக அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார். மேலும், 2023ல் இத்தாலியில் நடந்த உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட 16 பேரில் இவரும் அங்கம் வகித்தார். இதில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
விளையாட்டு மற்றும் என்.சி.சி.,யில் ஒரே சமயத்தில் சிறந்து விளங்கினார். இதன் காரணமாக இவருக்கு கடந்த ஆண்டு ரக் ஷா மந்திரி பதக்கம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் வழங்கப்பட்டது. - நமது நிருபர் -

