தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அதிகார பகிர்வு விவகாரத்தில் நீடிக்கும் மர்மம்: கர்நாடகாவில் சித்து - சிவகுமார் பேச்சு தோல்வி

 அதிகார பகிர்வு விவகாரத்தில் நீடிக்கும் மர்மம்: கர்நாடகாவில் சித்து - சிவகுமார் பேச்சு தோல்வி

 அதிகார பகிர்வு விவகாரத்தில் நீடிக்கும் மர்மம்: கர்நாடகாவில் சித்து - சிவகுமார் பேச்சு தோல்வி


ADDED : நவ 29, 2025 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 11:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடகாவில் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக நீடித்து வரும் மர்மத்துக்கு நேற்றும் முற்றுப்புள்ளி விழவில்லை. முதல்வர் சித்தராமையாவுக்கும் துணை முதல்வர் சிவகுமாருக்கும் இடையே நடந்த பேச்சு, தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த, 2023ல் ஆட்சி அமைவதற்கு, மாநில காங்., தலைவராக இருக்கும் துணை முதல்வர் சிவகுமாரும் முக்கிய காரணம். அப்போதே அவர் முதல்வர் பதவி வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால், நீண்ட ஆலோசனைக்கு பின், சித்தராமையாவுக்கு இரண்டாவது முறையாக முதல்வர் பதவி கிடைத்தது.

இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று மேலிட தலைவர்கள் முன்னிலையில் வாய்மொழி ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது.

குழப்பம் சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் முடிந்த நிலையில், சிவகுமார் முதல்வராக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அவரது ஆதரவாளர்கள் கடந்த ஒரு மாதமாக கூக்குரல் எழுப்பி வந்தனர். இதற்கு எதிராக முதல்வரின் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கருத்துகளை கூறியதால், மாநிலத்தில் குழப்பம் ஏற்பட்டது.

ஆட்சி இயந்திரம் முடங்கியதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய துவங்கின. இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கிக்கொள்ள விரும்பிய மேலிடம், 'நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்' என கட்டளையிட்டது.

அதன்படி, பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள முதல்வரின் அரசு பங்களாவான 'காவிரி'யில் நேற்று காலை 9:30 மணிக்கு, துணை முதல்வர் சிவகுமாரை, சிற்றுண்டிக்கு வரும்படி, முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்தார். 10:00 மணிக்கு பின் தான், சிவகுமார் வந்தார்.

இந்த பேச்சின் போது, மேலிட உத்தரவுப்படி, முதல்வரின் சட்ட ஆலோசகரும், எம்.எல்.ஏ., வுமான பொன்னண்ணாவும் உடன் இருந்தார்.

இட்லி, உப்புமா, தோசை, சட்னி, சாம்பார், கேசரிபாத், சிற்றுண்டியில் பரிமாறப்பட்டதாக தகவல் வெளியானது.

சிற்றுண்டிக்கு பின், ஒரு தனி அறைக்கு சென்று ரகசிய பேச்சு நடத்தினர். வேறு யாரும் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. அரைமணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நீடித்தது.

அதன் பின், கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்த இருவரும், காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும், ஒற்றுமையாக இருப்பதாகவும் கூறி, அதிகார பகிர்வு குறித்த பிரச்னையை டில்லி தலைவர்களிடம் தள்ளிவிட்டுஉள்ளனர். இதன் மூலம், நேற்றைய சிற்றுண்டி ஆலோசனை கூட்டம் தோல்வியில் முடிந்ததாக கருதப்படுகிறது.

கார்கே - ராகுல் சித்தராமையா, சிவகுமார் பேச்சு குறித்தும் அப்போது எடுக்கப்பட்ட முடிவு குறித்தும், மத்தியஸ்தம் வகித்த முதல்வரின் சட்ட ஆலோசகர் பொன்னண்ணா, காங்., பொதுச்செயலர் வேணுகோபாலுக்கு மொபைல் போன் மூலம் தகவல் அளித்தார்.

இதையடுத்து, டில்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டிற்கு, நேற்று மாலை, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அவசரமாக வந்தார்.

கர்நாடகாவில் நடக்கும் அரசியல் குழப்பம் குறித்து, இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, ஓரிரு நாளில், சோனியாவுடனும் , கர்நாடக தலைவர்களையும் அழைத்து, இறுதி முடிவு எடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பட்ஜெட் வரை நீடிப்பு?

முதல்வரும், துணை முதல்வரும் மேலிட உத்தரவுப்படி செயல்படலாம் என்று வெளிப்படையாக கூறினாலும், அடுத்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வரை தனக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிவகுமாரிடம், சித்தராமையா வலியுறுத்தியிருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கர்நாடக வரலாற்றில் அதிக பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற சாதனையை படைக்க அவர் விரும்புகிறார். இதற்கு சிவகுமார் ஒப்புக்கொண்டாரா என்பதை, மேலிடம் அறிவிக்கும்போது தெரியும். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பது, பகிரங்கமாக தெரிந்தும், தங்களுக்குள் ஒன்றும் இல்லை; ஒற்றுமையாக இருக்கிறோம் என்று இருவரும் 'சப்பைக்கட்டு' கட்டுவது, அவர்களின் பேட்டியில் இருந்து தெரிந்தது.



- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us