நிறம் மாறும் மைசூரு நகர கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள்
நிறம் மாறும் மைசூரு நகர கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள்
ADDED : பிப் 03, 2025 05:03 AM

மைசூரு; பச்சை, சிவப்பு நிறத்தில் இயங்கி வந்த மைசூரு நகர கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், இனி 'ஸ்கை புளு - வெள்ளை' நிறத்தில் இயங்க உள்ளன.
கர்நாடகாவில் 'சக்தி திட்டம்' அறிமுகப்படுத்திய பின், பஸ்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அனைத்து பஸ்களும் நிரம்பியே செல்வதால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து, கே.எஸ்.ஆர்.டி.சி., மைசூரு பிரிவு, மைசூருக்கு 100 புதிய பஸ்களை வாங்க கோரிக்கை விடுத்தது. அரசும் இதை ஏற்றுக் கொண்டு, தேசிய நகர புதுப்பிப்பு திட்டத்தின் கீழ், 100 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிமுறைப்படி, ௧௦ லட்சம் கி.மீ., ஓடிய பஸ்களை மாற்ற வேண்டும். அதன்படி, மைசூரில் ௧௦ லட்சம் கி.மீ., ஓடிய பஸ்சை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக, புதிதாக வாங்கப்பட்ட டாடா நிறுவனத்தின் 'ஐமாக்' என்ற பஸ் கடந்த ஒரு வாரமாக நகரில் இயங்கி வருகிறது.
ஆனால் நகர பஸ்சின் வண்ணம் மாற்றப்பட்டுள்ளது. இது பல தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளன. இதுபோன்று மற்ற பஸ்களையும் மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, 550 மைசூரு நகர, தாலுகா பஸ்கள், 25 நஞ்சன்கூடு டிப்போ பஸ்கள் என 575 பஸ்களின் வண்ணத்தையும் மாற்ற தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் விதிமுறைப்படி, ஒவ்வொரு மாதமும் 30 முதல் 40 பஸ்கள், அதன் தர சான்றிதழ் புதுப்பிக்க வேண்டும். இதற்கு முன்னதாகவே, 30 பஸ்களுக்கு புதிய வண்ணம் மாற்றி, அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., மைசூரு பிரிவு கட்டுப்பாட்டாளர் வீரேஷ் கூறியதாவது:
கடந்த 15 ஆண்டுகளாக, மைசூரு நகர கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ஒரே நிறத்தில் இயங்கி வருகின்றன. தற்போது புதிதாக இயங்கும் ஸ்கை புளு நிற பஸ்கள், பயணியரை வெகுவாக ஈர்த்துள்ளன.
இந்த நிறம், மற்ற பஸ்களுக்கும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு உள்ளது. எப்.சி., சான்றிதழ் பெற்ற பின், அனைத்து பஸ்களும், இதே நிறத்தில் மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.