நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம்: எஸ்.பி., பேச்சால் திடீர் சர்ச்சை
நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம்: எஸ்.பி., பேச்சால் திடீர் சர்ச்சை
ADDED : டிச 05, 2024 05:31 AM

திருச்சி : ''நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம். இதுபோன்ற இயக்கங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்,'' என, சண்டிகர் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாநாட்டில், திருச்சி எஸ்.பி., வருண்குமார் பேசினார்.
இந்தியா முழுதும் உள்ள, 100க்கும் மேற்பட்ட இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்ற மாநாடு, நேற்று சண்டிகரில் நடந்தது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மாநாட்டை துவக்கி வைத்தனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்க, தமிழகத்தில் இளம் ஐ.பி.எஸ்., அதிகாரியான, திருச்சி எஸ்.பி., வருண்குமாருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது. மேலும், சைபர் கிரைம் துறையில் தற்போதுள்ள சவால்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட, 20 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய குழுவுக்கு தலைமையேற்று, அவரை உரையாற்றவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மாநாட்டில் கலந்து கொண்டு வருண்குமார் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியினர், உலகில் எங்கிருந்தும், இணையதளங்கள் வாயிலாக பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நாம் தமிழர் இயக்கம் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு இயக்கம்.
குற்றச்செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்ட நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் மீது, சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக, என்னையும் ஐ.பி.எஸ்., அதிகாரியான என் மனைவி மற்றும் குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இவையனைத்தையும் வெளிநாடுகளில் இருப்போரை வைத்து செய்துள்ளனர். இதுகுறித்து முறையாக புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் நியாயத்தின் பக்கம் இருப்போம் என்று சொல்லி, உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் எனக்கு ஆதரவு அளித்தது.
ஆனால், ஆபாசமான பதிகளை யார் செய்தது என்ற விபரம் கேட்டு, சமூக வலைதள அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மூன்று மாதமாகியும் இன்னும் அந்த விபரங்கள் கிடைக்கவில்லை. அதேபோல, என் குடும்பத்தாரை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் இன்றைக்கும் உள்ளன.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உலகம் முழுதும் உள்ளனர். பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அவ்வியக்கத்தைச் சேர்ந்தோரையும், இதுபோன்ற இயக்கங்களையும் சைபர் கிரைம் புலனாய்வில் உயரிய அமைப்பான ஐபோர்சி தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.