ரூ.10,380 கோடி அள்ளி கொடுத்த பெரும் செல்வந்தர்கள்; தினசரி ரூ.7.40 கோடி தந்து ஷிவ் நாடார் முதலிடம்
ரூ.10,380 கோடி அள்ளி கொடுத்த பெரும் செல்வந்தர்கள்; தினசரி ரூ.7.40 கோடி தந்து ஷிவ் நாடார் முதலிடம்
ADDED : நவ 07, 2025 08:16 AM

புதுடில்லி: நாட்டின் பெரும் செல்வந்தர்களிடம் நற்பணிகளுக்காக கொடுக்கும் மனம், முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து இருக்கிறது.
கடந்த நிதியாண்டில் மொத்தம் 10,380 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர். ஹுருன் இந்தியா நிறுவனத்தின் 'எடெல்கிவ் ஹுருன் இந்தியா பிலான்தெரபி' தரவரிசை பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 7.40 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி, எச்.சி.எல்., நிறுவனத்தின் ஷிவ் நாடார் இந்த பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
இவர், மொத்தம் 2,708 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு முறை, ஷிவ் நாடாரே முதலிடம் பிடித்துள்ளார்.
முக்கிய விபரங்கள்
இந்த பட்டியலில், 5 கோடி ரூபாய்க்கு அதிகமாக நன்கொடை வழங்கிய 191 பேர் இடம்பெற்றுள்ளனர்
* புதிதாக, 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.
* பெண்கள், 24 பேர் இடம்பிடித்துள்ளனர்.
* மொத்த நன்கொடை மதிப்பு கடந்த மூன்று நிதியாண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.
* அதிக நன்கொடை வழங்கிய நிறுவனமாக இன்போசிஸ் விளங்குகிறது.
* இதன் நிறுவனர்கள், குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 850 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளனர்.
* ஜெரோதாவின் நிகில் காமத் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இளம் நன்கொடையாளராக நீடிக்கிறார்.
* டாப் 25 நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பெறுவதற்கான வரம்பு, 70 கோடி ரூபாயாக அதிகரிப்பு: கடந்த 2014ஐ விட 180 சதவீதம் உயர்வு.
* டாப் 25 நன்கொடையாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 50,000 கோடி ரூபாய் வழங்கினர். இது தினசரி 46 கோடி ரூபாய்.
பெண்களில் ரோஹிணி முதலிடம்
கடந்த நிதியாண்டில், 204 கோடி ரூபாய் வழங்கிய ரோஹிணி நிலேகனி, பெண் நன்கொடையாளரில் முதலிடம் பிடித்துள்ளார். 65 வயதாகும் இவர், அக் ஷரா பவுண்டேஷன் தலைவராக உள்ளார்.
துவக்க கல்வியில் இந்த அமைப்பு கவனம் செலுத்துகிறது. அர்க்யம் என்ற அறக்கட்டளை வாயிலாகவும் குடிநீர், கழிப்பறை பிரச்னைகளுக்கு ரோஹிணி தீர்வு கண்டு வருகிறார். ஆதார் அமைப்பின் தலைவராக இருந்த நந்தன் நிலேகனியின் மனைவியான இவர், எழுத்தாளர் ஆவார்.

