ADDED : பிப் 21, 2024 06:44 AM

கோலார் லோக்சபா தொகுதியில் காங்கிரசில் 2019ல் ஏற்பட்ட கோஷ்டி சிக்கல் இன்னும் முடிந்தபாடில்லை. 28 ஆண்டுகள் எம்.பி.,யாக இருந்த கே.ஹெச். முனியப்பாவை, கர்நாடக முன்னாள் சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் தலைமையிலான அதிருப்தியாளர்கள் ஒன்று சேர்ந்து தோல்வி அடைய வைத்தனர்.
இதற்கு பதிலடியாக, கடந்த சட்டசபைத் தேர்தலில் சீனிவாசப்பூர் தொகுதியில் ரமேஷ் குமாரை தோற்கடித்து, கே.ஹெச்.முனியப்பா கோஷ்டியினர் சமாதானப்படுத்திக் கொண்டனர்.
வரும் லோக்சபா தேர்தலுக்கு தயாராக வேண்டிய வேளையில், மீண்டும் கோஷ்டி பூசல் தலைதுாக்கி உள்ளது. இத்தொகுதியில் காங்கிரசில் போட்டியிட கே.ஹெச்.முனியப்பா ஆர்வமாக உள்ளார்.
தீராத கோபம்
தன்னை சட்டசபைக்குச் செல்லவிடாமல் தடுத்த கே.ஹெச்.முனியப்பா மீதான கோபம், ரமேஷ் குமாருக்கு இன்னமும் தணியவில்லை. லோக்சபா தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்க விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.
அவரை, அவரது ஆதரவாளர்கள் உசுப்பேத்தி வருகின்றனர். இதனால், கோலார் தொகுதியில் காங்கிரஸ் இரண்டு கோஷ்டிகளாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் லட்சுமி நாராயணா தலைமையில் நடந்த 'பூத்' கமிட்டி கூட்டத்தில் நடந்த மோதலால், தொகுதியை மீண்டும் கட்சி வசம் கொண்டு வர முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
அமைச்சர் கே.ஹெச்.முனியப்பாவும், முன்னாள் சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமாரும் வெளிப்படையாக மோதலில் ஈடுபடவில்லை; வார்த்தையால் யுத்தம் நடத்தவும் இல்லை. இரு தரப்பிலும் ஆதரவாளர்களை விட்டு மோத வைக்கின்றனர். இதை கட்சி மேலிடமும் நன்கு உணர்ந்துள்ளது.
புதிய அணி
இதற்கிடையில், இரண்டு அணியும் தேவை இல்லை; புதியதாக முல்பாகலின் முன்னாள் எம்.எல்.ஏ.,வாக் இருந்த, முன்னாள் கலால் துறை அமைச்சரான நாகேஷ், தனக்கு லோக்சபா தேர்தலில் 'சீட்' வேண்டும் என்ற முனைப்பில் இறங்கி உள்ளார்.
முல்பாகல் தொகுதியில் 2018 தேர்தலின்போது, காங்கிரஸ் வேட்பாளர் களத்தில் இல்லாததால், சுயேச்சையாகப் போட்டியிட்ட நாகேஷை, கொத்துார் மஞ்சுநாத் உதவியுடன், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் உத்தரவின் பேரில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
வெற்றியும் பெற்றார்; பதவிகளும் வகித்தார். பா.ஜ., அரசுக்கு ஆதரவு தெரிவித்தார். இவருக்கு கொடுத்த அமைச்சர் பதவியை பறித்ததால் கோபம் அடைந்தார்.
கடந்த சட்டசபை தேர்தலில், சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மின்துறை பொறியாளரான இவர், வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரசில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்.
இவர், துணை முதல்வர் சிவகுமாருக்கு வேண்டப்பட்டவர். ஆனாலும் அவருக்கு சீட் கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான். 2018 தேர்தலைப் போன்று, தனக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என எதிர்பார்க்கிறார்.

