ADDED : பிப் 16, 2024 06:57 AM

நாகநாதர் கோவிலின், நாகேஸ்வரர் சந்தான வரம் தரும் சக்தி உள்ளவர். திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைகள் இல்லாத பெண்கள், கோவிலுக்கு வந்து குழந்தை வரம் பெறுகின்றனர்.
கர்நாடகாவின், பல இடங்களில் நாகர் கோவில்கள் உள்ளன. அந்தந்த கோவிலுக்கு தனித்தனி சிறப்புகள் உள்ளன. அதேபோன்று, பீதரில் சீமி நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள நாகேஸ்வரர் குழந்தை வரம் கொடுப்பவர்.
பீதர், ஹும்னாபாத்தின், ஹள்ளிகேதா பி கிராமத்தில் அமைந்துள்ள சீமி நாகநாதர் கோவில், பல சிறப்புகளை உள்ளடக்கியது. சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்கிறது. குழந்தை இல்லாத தம்பதி, கோவிலுக்கு வந்து நாகமாலை அணிந்து வேண்டினால், கை மேல் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லாத தம்பதியர், நாகேஸ்வரரின் மகிமையை தெரிந்து கொண்டு, இங்கு வருகின்றனர். நாகமாலை அணிந்து பிரார்த்தனை செய்து, குழந்தை வரம் பெறுகின்றனர்.
குழந்தை பிறந்த பின், நாகேஸ்வரருக்கு தாய்ப்பாலை, புற்றில் ஊற்றி நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். கோவிலின் சுற்றுச் சுவர்களில், நாகேஸ்வரரின் மகிமை, அற்புதங்களை விவரிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பெண்கள் பெருமளவில் வருகின்றனர். புரட்டாசி மாதம் கோவிலுக்கு உகந்தது. அந்த மாதம் முழுதும், பூஜை, திருவிழா என, கிராமம் களை கட்டும். நாகேஸ்வரர் பல அற்புதங்களை செய்தவர்.
கோவிலுக்கு பக்தர் ஒருவர் காணிக்கையாக கொடுத்த வெள்ளி நாகர் சிலையை, அர்ச்சகர் ஒருவர் அடகு கடையில் விற்க முற்பட்டார்.
அப்போது, கடைக்காரரின் தராசில் நாகம் தோன்றி, அர்ச்சகரை விரட்டி அடித்ததாம். இது போன்ற பல சம்பவங்கள் நடந்ததாக கிராமத்தினர் கூறுகின்றனர். ஒரு முறை இங்கு வந்து சென்றால், கஷ்டங்கள் விலகி, நிம்மதி கிடைப்பது அனுபவ பூர்வமான உண்மை
- நமது நிருபர் -.