ADDED : அக் 21, 2024 12:28 AM

பெங்களூரு : பெங்களூரு மக்களின் உயிர் நாடியான மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கி, நேற்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்தன.
போக்குவரத்து நெருக்கடியால் சிக்கி தவித்த மக்களுக்கு, மெட்ரோ ரயில் மிகவும் உதவியாக இருந்தது. 2011 அக்டோபர் 20ம் தேதி, பெங்களூரில் முதன் முறையாக மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கியது. அன்றைய முதல்வர் சதானந்தகவுடா, பையப்பனஹள்ளியில் இருந்து, எம்.ஜி.சாலை வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவக்கி வைத்தார்.
மக்களின் உயிர்நாடியாக விளங்கும் நம்ம மெட்ரோ, இன்று 56.1 கி.மீ., வரை விரிவடைந்துள்ளது. வரும் நாட்களில் பெங்களூரின் முக்கியமான இடங்களுக்கும் விரிவடையும்.
நம்ம மெட்ரோவில், தினமும் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். ஆகஸ்ட் 14ம் தேதி மட்டுமே, 9 லட்சத்து 17,365 பேர் பயணித்தனர். பெங்களூரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கி, நேற்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்தன.
நம்ம மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை, மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஏற்றுள்ளது. நகரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கி, இன்று (நேற்று) 13 ஆண்டு நிறைவடைந்தது. பையப்பன ஹள்ளி - எம்.ஜி.சாலை இடையே, 6 கி.மீ., தொலைவில் துவங்கிய நம்ம மெட்ரோ சேவை, தற்போது 56.1 கி.மீ., ஆக விரிவடைந்துள்ளது.
இன்னும் சில நாட்களில், சில்க் போர்டு வரை, மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும். கட்டம், கட்டமாக நம்ம மெட்ரோ சேவை விஸ்தரிக்கப்படும். ஒன்றிரண்டு ஆண்டில், மெட்ரோ போக்குவரத்தை 200 கி.மீ., ஆக விஸ்தரிக்க மெட்ரோ நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த சாதனை.
ஆர்.வி.சாலையில் இருந்து, பொம்மசந்திராவிற்கு துவக்கப்படும் மஞ்சள் பாதையில், இப்போதே முதன் முறையாக ஓட்டுனர் இல்லாத ரயில் இயக்க முடிவு செய்துள்ளோம். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. சிக்னல், பாதுகாப்பு சோதனை முடிந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கட்டணம் உயர்வு?
மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து, மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. வாகன நெரிசல் இன்றி, துாசி பிரச்னை இல்லாமல் நிம்மதியாக செல்ல வேண்டிய இடத்தை சென்றடைகின்றனர். குறைந்த நேரத்தில் பயணிக்கலாம். இதனால் பொது மக்கள் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மெட்ரோ ரயில் பயணியர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இவர்களுக்கு அனுகூலமாகும் வகையில், ரயில் போக்குவரத்து பல்வேறு இடங்களுக்கு விஸ்தரிக்கப்படுகிறது. இதற்கிடையே டிக்கெட் கட்டணத்தை உயர்த்த, பெங்., மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து, மக்களிடம் கருத்து சேகரிக்கிறது.
மக்கள் கருத்து தெரிவிக்க, அக்டோபர் 21 வரை, கால அவகாசம் அளித்திருந்தது. இந்த கால அவகாசம் இம்மாதம் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களின் கருத்தை ffc@bmrc.co.in. வலை தளத்தில் தெரிவிக்கலாம். தபால் மூலமாக அனுப்பலாம் அல்லது 94482 91173 என்ற, வாட்ஸாப் எண்ணிலும் கருத்தை அனுப்பலாம்.
கடந்த ஏழு ஆண்டுகளாக, மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கட்டண உயர்வு தொடர்பாக, 'தி பேர் பிக்சேஷன் கமிட்டி' அமைத்துள்ளது.
இது, மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதி அடங்கிய கமிட்டியாகும். மக்களின் கருத்தை சேகரித்து, எவ்வளவு ரூபாய் உயர்த்த வேண்டும் என்பதை, இந்த கமிட்டி தீர்மானிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
