பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகரிப்பு கை கொடுக்கும் 'நம்ம யாத்ரி' நிறுவனம்
பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகரிப்பு கை கொடுக்கும் 'நம்ம யாத்ரி' நிறுவனம்
ADDED : அக் 18, 2024 11:08 PM

பெங்களூரு: இலவசமாக ஆட்டோ ஓட்டும் பயிற்சி அளிக்கும், 'நம்ம யாத்ரி' நிறுவனத்தின் பயனாக, மகளிர் ஆட்டோ ஓட்டுனர்கள் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளது.
பெங்களூரின், 'நம்ம யாத்ரி' நிறுவனம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கில், 'மஹிளா சக்தி' என்ற திட்டத்தை, 2023ல் செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், ஆர்வம் உள்ள பெண்கள், இலவசமாக ஆட்டோ ஓட்டும் பயிற்சி பெற்றனர். இது, அவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. நுாற்றுக்கணக்கான பெண்கள், ஆட்டோ ஓட்டும் பயிற்சி பெற முன் வந்தனர்.
இதுவரை, 108 பெண்கள் பயிற்சி முடிந்து, ஆட்டோ ஓட்டி புது வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டனர். மேலும் 30 பெண்கள் பயிற்சி பெறுகின்றனர். இதுதொடர்பாக, நம்ம யாத்ரி நிறுவனத்தின், ஓட்டுனர் பிரிவு தலைமை பயிற்சியாளர் நாகலட்சுமி கூறியதாவது:
'நம்ம யாத்ரி' நிறுவனம், பொதுமக்களுக்கு ஆட்டோ சேவை வழங்குகிறது. ஓட்டுனர்களும் பெண்களாக இருந்தால், பாதுகாப்பாக இருக்கும் என, சில பெண் பயணியர் கருத்து தெரிவித்தனர்.
இதை மனதில் கொண்டு, பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டும் பயிற்சியளிக்க, நிறுவனம் முன்வந்தது. இதற்காக, 'மஹிளா சக்தி' என்ற திட்டத்தை செயல்படுத்தியது.
பயிற்சியில் ஆர்வம்
நுாற்றுக்கணக்கான பெண்கள், பயிற்சி பெற ஆர்வமாக முன் வந்தனர். சிலர் பாதியில் பயிற்சியை நிறுத்தினர். 108 பெண்கள் பயிற்சி முடித்து, ஆட்டோ ஓட்டுனராக தொழிலை துவங்கியுள்ளனர்; 30 பேர் பயிற்சியில் உள்ளனர். பயிற்சி பெற விரும்பும் பெண்களுக்கு, நேர்முக தேர்வு நடத்தப்படும். மூன்று நாட்கள் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்பின் 40 நாட்கள் ஆட்டோ ஓட்டும் பயிற்சி அளிக்கப்படும். திங்கள் முதல் வெள்ளி வரை சோதனை முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சனிக்கிழமை ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நிறுவனத்தின், 12 பயிற்சியாளர்கள், கோரமங்களா, டிமார்ட், பிரேசர் டவுன், பிஸ்மில்லா நகரில் ஓட்டுனர் பயிற்சி அளிக்கின்றனர். தினமும் இரண்டு குழுக்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள், மொபைல் போன் பயன்படுத்தும் விதம், வரைபடத்தை பார்த்து வாகனம் ஓட்டுவது, பயணியருடன் நடந்து கொள்ளும் விதம் குறித்து, தெரிவிக்கப்படுகிறது.
ரூ.400 சேமிப்பு
பயிற்சி பெற்றவர்களுக்கு, ஆட்டோ வாங்க பொருளாதார வசதி இருக்காது. எனவே எங்கள் நிறுவனமே, அவர்களுக்கு தினமும் 395 ரூபாய் வாடகை நிர்ணயித்து, நான்கு மாதங்களுக்கு ஆட்டோ வழங்கும்.
தினமும் குறைந்தபட்சம் 1,200 ரூபாய் சம்பாதிக்கும்படி, ஆலோசனை கூறியுள்ளது. அப்போதுதான் வாடகை, மற்ற செலவுகள் போக, 400 ரூபாயை மிச்சப்படுத்த முடியும்.
நான்கு மாதங்களுக்கு, 50,000 ரூபாய் சேமிக்கலாம். இதை மூலதனமாக வைத்து, வங்கியில் கடன் பெற்று சொந்தமாக ஆட்டோ ஓட்டலாம். இந்த திட்டத்தால் பெண்களுக்கு, பணத்தை சேமிக்கும் பழக்கம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்டோ ஓட்டுனர் தமிழ்ச்செல்வி கூறியதாவது:
என் கணவர் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காலமானார். மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டிய கடமை எனக்கு இருந்தது. வீட்டு வேலை செய்தேன். ஹோட்டலில் வேலை செய்தேன். காய்கறி வியாபாரம் செய்தேன். ஆனால், வாழ்க்கையை நகர்த்துவது கஷ்டமாக இருந்தது.
அப்போதுதான் 'நம்ம யாத்ரி' நிறுவனம், எனக்கு கடவுள் போன்று கை கொடுத்தது. ஒன்றரை மாதம் ஆட்டோ ஓட்ட பயிற்சி அளித்தது. அதன்பின் நான்கு மாதம் வாடகைக்கு ஆட்டோ கொடுத்தனர். அதில் சேமித்த பணத்துடன், வங்கியில் கடன் பெற்று, 15 நாட்களுக்கு முன்புதான், புதிய ஆட்டோ வாங்கினேன்.
தினமும் 1,000 முதல் 1,500 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். தற்போதைக்கு சேமிப்பு ஏதும் இல்லை. குடும்ப செலவுகளுக்கும், கடனுக்கும் சரியாகிறது. ஆனால் எனக்கு நானே முதலாளியாக இருப்பது பெருமை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.