ADDED : டிச 26, 2024 06:31 AM

பெங்களூரு: கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டுறவு சங்கம், 'நந்தினி' பிராண்ட் இட்லி மற்றும் தோசை மாவை அறிமுகம் செய்துள்ளது.
பெங்களூரின் விதான் சவுதாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'நந்தினி' பிராண்ட் இட்லி, தோசை மாவை முதல்வர் சித்தராமையா வெளியிட்டார்.
இதுகுறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் முதல்வர் சித்தராமையாவின் பதிவு:
கே.எம்.எப்., அறிமுகம் செய்துள்ள 'நந்தினி' மாவில், 5 சதவீதம் புரோட்டீன் சேர்க்கப்பட்டுள்ளது. பெங்களூரில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் இதன் தேவைக்கு ஏற்ப, மற்ற மாவட்டங்களுக்கும் விஸ்தரிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மொத்தம் 450 கிராம் எடையுள்ள இட்லி, தோசை மாவு பாக்கெட் 40 ரூபாய்; 900 கிராம் எடை கொண்ட பாக்கெட்டுக்கு 80 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கே.எம்.எப்.,பின் நந்தினி உற்பத்தி பொருட்கள், நாடு முழுதும் விஸ்தரிக்கப்படுகின்றன. டில்லியிலும் 'நந்தினி' பால் சென்றடைந்துள்ளது. தொலை துாரத்தில் உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களிலும், 'நந்தினி' பாலுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பிரசித்தி பெற்ற திருத்தலமான திருப்பதி லட்டுகள், நந்தினி நெய்யால் தயாரிக்கப்படுகின்றன. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தோசை, இட்லி மாவு மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. புரோட்டீன் நிறைந்த தரமான மாவு, மக்களின் கைக்கு எட்டும் விலையில் கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

