ADDED : நவ 20, 2024 10:38 PM
பெங்களூரு:கர்நாடகாவின் கே.எம்.எப்., நந்தினி பிராண்ட் பால், தயிர் உட்பட பல்வேறு உற்பத்தி பொருட்களின் விற்பனையை முதல்வர் சித்தராமையா இன்று டில்லியில் துவக்கிவைக்கிறார்.
கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, நந்தினி பிராண்ட் பெயரில் பால், தயிர், இனிப்புகள் உட்பட, பல்வேறு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்கிறது. இம்மாதம் 26ம் தேதி, நந்தினி பிராண்ட் இட்லி, தோசை மாவை அறிமுகம் செய்யவுள்ளது.
விற்பனையை வெவ்வேறு மாநிலங்களில் விஸ்தரித்துள்ளது. முதல்வர் சித்தராமையா டில்லியில் நந்தினி பிராண்ட் உற்பத்திகளை, இன்று அறிமுகம் செய்கிறார்.
இது தொடர்பாக, கே.எம்.எப்., நிர்வாக இயக்குனர் ஜெகதீஷ் அளித்த பேட்டி:
டில்லியில் தற்போது மதர் டெய்ரி, அமுல், மதுசூதன், நமஸ்தே இந்தியா உட்பட சில பிராண்ட் பால்கள் மட்டுமே பிரபலமடைந்துள்ளன.
மாண்டியாவில் இருந்து டில்லிக்கு சாலை வழியாக பால் அனுப்பப்படும். ஏற்கனவே சோதனை முறையில் பால் அனுப்பினோம். மாண்டியாவில் இருந்து டில்லி செல்ல 54 மணி நேரமானது. டில்லிக்கு பால் கொண்டு செல்ல, 2,190 டேங்கர்கள் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.