ADDED : டிச 21, 2024 11:00 PM
பெங்களூரு: புதுடில்லியில் கால் பதித்துள்ள நந்தினி பால், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.
கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பீமா நாயக் அளித்த பேட்டி:
கர்நாடக பால் கூட்டமைப்பு, நந்தினி என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை சப்ளை செய்து வருகிறது. இதன் பெருமை, நாடு முழுதும் பரவி உள்ளது.
தற்போது, நாட்டின் தலைநகரான புதுடில்லியில், பல தடைகளை கடந்து தினசரி 15 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் 25 ஆயிரமாக விற்பனையை அதிகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டில் புதுடில்லி கர்நாடக பவனில் நந்தினி பால் பார்லர் திறக்கப்பட உள்ளது.
இது மட்டுமின்றி, ராஜஸ்தான் மாநிலத்திலும் கால்பதிக்க தயாராகி வருகிறது. முதலில், ஜெய்ப்பூர் நகரில் பால் விற்பனையை துவக்குகிறது. இதன் பின், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த மாநிலங்களுக்கு ஷிவமொக்கா பால் உற்பத்தி நிலையத்திலிருந்து பால் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவை கடந்து நந்தினி பால் பொருட்கள் பிற மாநிலங்களுக்கும் விரிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.