ADDED : நவ 28, 2024 12:36 AM

மலையேற்றத்தில் ஆர்வம் உள்ளவர்களை ஈர்க்கும் பல இடங்கள், கர்நாடகாவில் உள்ளன. இவற்றில் 1,700 அடி உயரமான நரசிம்ஹகடா மலையும் ஒன்று. இது சுற்றுலா பயணியருக்கும் விருப்பமான இடமாகும்.
தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடியின் நடா கிராமத்தில் நரசிம்ஹகடா மலை அமைந்துள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து, 1,700 அடி உயரத்தில் உள்ள மலை, சுற்றுலா பயணியரின் சொர்க்கம். இது மிகவும் பிரசித்தி பெற்றது.
இதன் வடிவமைப்பே வித்தியாசமானது. இந்த மலையை 'கடாயி' என்றும் அழைக்கின்றனர். கடாயி என்றால் பிரம்மாண்டம் என அர்த்தம்.
டிரெக்கிங் பிரியர்களுக்கு விருப்பமானது. 1,000க்கும் மேற்பட்ட படிகள் உள்ளன. ஒவ்வொரு படிகளும் ஒன்றை விட மற்றொன்று மாறுபட்டதாக தென்படுகின்றன.
செப்டம்பர் முதல் மே மாதம் வரை, நரசிம்ஹகடாவுக்கு சுற்றுலா செல்ல தகுந்த நேரம். மலைக்குச் செல்லும்போது, குடிநீர், உணவு, சிற்றுண்டி கொண்டு செல்லுங்கள்.
தேவையான பொருட்களுடன் சென்றால், அமைதியான சூழலில், இயற்கையை ரசித்தபடி மாலை வரை நிம்மதியாக பொழுது போக்கிவிட்டு திரும்பலாம். மொபைல் போனில் நன்றாகவே 'நெட் ஒர்க்' கிடைக்கும்.
நரசிம்ஹகடா மலைக்கு செல்ல விரும்புவோர், பெல்தங்கடி வழியாக வர வேண்டும். பஸ்சிலோ அல்லது ரயிலிலோ வந்தால், பெல்தங்கடியில் இறங்க வேண்டும். அங்கிருந்து கில்லுாருக்கு செல்லும் பாதையில், மஞ்சொட்டே என்ற இடத்தில் இறங்க வேண்டும். இங்கிருந்து இரண்டு கி.மீ., நடந்து சென்றால், நரசிம்ஹகடா மலையை அடையலாம். நடக்க முடியாதவர்கள், ரிக்ஷாவில் செல்லலாம். கில்லுார் கிராமத்தில் இருந்து, 15 நிமிடங்களுக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது.
- நமது நிருபர் -