தமிழ் கலெக்டர் திவ்யா பிரபுவுக்கு தேசிய விருது அறிவிப்பு
தமிழ் கலெக்டர் திவ்யா பிரபுவுக்கு தேசிய விருது அறிவிப்பு
ADDED : ஜன 18, 2024 05:15 AM

பெங்களூரு: இந்திய தேர்தல் கமிஷன் சார்பில் சிறந்த தேர்தல் நடைமுறைகளை அமைத்ததற்காக, சித்ரதுர்கா மாவட்ட கலெக்டராக உள்ள தமிழ் கலெக்டர் உட்பட இருவருக்கு சிறந்த தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தியதற்காக, 'தேசிய விருது' கிடைத்துள்ளது.
இந்திய தேர்ல் கமிஷன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
இந்திய தேர்தல் கமிஷன் சார்பில் சிறந்த தேர்தல் நடைமுறைகளை ஊக்குவிப்போருக்கு, தேசிய அளவிலான விருது வழங்கப்படுகிறது.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. 'பொது பிரிவில்', சித்ரதுர்கா மாவட்ட கலெக்டராகவும், மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியாகவும் பணிபுரியும் திவ்யா பிரபு, வணிகத்துறை கமிஷனர் ஷிகாவுக்கும் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இளம் வாக்காளர்கள் பதிவு, சிறப்பு வாக்காளர் பதிவு அதிகரிப்பு உட்பட வாக்காளர் பட்டியல் நிர்வகிப்பில் சிறந்து விளங்கயதாக திவ்யா பிரபுக்கு விருது கிடைத்து உள்ளது.
அதுபோன்று சட்டசபை தேர்தலின்போது, வணிக வரி கமிஷனராக இருந்த ஷிகா, பொது விழிப்புணர்வு, தேர்தல் நடத்தை விதிகள் கடைபிடிப்பது உட்பட சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கும் இவ்விருது கிடைத்துள்ளது.
வரும் 25ம் தேதி புதுடில்லியில் நடக்கும் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில், இருவருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சித்ரதுர்கா மாவட்ட கலெக்டராக உள்ள திவ்யா பிரபு, தமிழகம் மதுரையை சேர்ந்தவர்.
கர்நாடகாவில் தேர்தலின்போது சிறப்பாக செயல்பட்ட தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.