சமூக வலைதள முகப்பு பக்கத்தில் தேசியக்கொடி: பிரதமர் வேண்டுகோள்
சமூக வலைதள முகப்பு பக்கத்தில் தேசியக்கொடி: பிரதமர் வேண்டுகோள்
ADDED : ஆக 09, 2024 04:16 PM

புதுடில்லி: இந்தியாவின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும், வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ள பிரதமர் மோடி, தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தேசியக்கொடியை முகப்பு படமாக வைத்து உள்ளார். அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் 78 வது சுதந்திர தினம் ஆக., 15 கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அன்றைய தினம் அனைவரும், வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி, ‛ மன் கி பாத் ' நிகழ்ச்சியின் போது வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கங்களில் தனது படத்தை நீக்கிவிட்டு தேசியக் கொடி படத்தை பிரதமர் வைத்துள்ளார். இது குறித்து வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
இந்த ஆண்டு சுதந்திர தினம் நெருங்கி வருகிறது. ஹர் கர் திரங்கா என்பதை மறக்க முடியாத மக்களுக்கான இயக்கமாக மீண்டும் மாற்றுவோம். நான் எனது முகப்பு படத்தை மாற்றுகிறேன். இதன் மூலம் நமது தேசியக்கொடியை கொண்டாடுவதில் என்னுடன் அனைவரும் இணைய வேண்டும். என கேட்டுக்கொள்கிறேன். தேசியக்கொடியுடன் உங்களின் செல்பிக்களை HTTPS:// harghartiranga.com என்ற இணையதளத்தில் பகிருங்கள். இவ்வாறு அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.