ADDED : மே 03, 2024 11:09 PM
தாவணகெரே : கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில், முதல் கட்டமாக, 14 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ம் தேதி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும்; பா.ஜ., 11 தொகுதிகளிலும்; ம.ஜ.த., மூன்று தொகுதிகளிலும் போட்டியிட்டன.
தேர்தல் முடிந்த நிலையில், பெரும்பாலான வேட்பாளர்கள் குடும்பத்தினருடன் ஹாயாக காலம் கழிக்கின்றனர். சிலர் வீட்டிலேயே ஓய்வில் உள்ளனர். ஆனால், இன்னும் சிலரை அந்தந்த கட்சி மேலிடம், இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கும் தொகுதிகளில் பிரசாரம் செய்ய அனுப்பி வைத்துள்ளன.
காங்கிரசின் பெங்களூரு தெற்கு வேட்பாளர் சவும்யாரெட்டி; பா.ஜ.,வின் பெங்., சென்ட்ரல் வேட்பாளர் பி.சி.மோகன்; உடுப்பி - சிக்கமகளூரு வேட்பாளர் கோட்டா சீனிவாச பூஜாரி; மைசூரு வேட்பாளர் யதுவீர், பெங்., தெற்கு வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா; ம.ஜ.த.,வின் மாண்டியா வேட்பாளர் குமாரசாமி உட்பட வெவ்வேறு கட்சி வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஷிவமொகா, தார்வாட், தாவணகெரே, பாகல்கோட், விஜயபுரா, பெலகாவி, சிக்கோடி என தங்களுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரசாரம் செய்கின்றனர். இன்றும், நாளையும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுவும் அவரவர் சமுதாய ஓட்டுகளை அள்ளும் வகையில், தலைவர்கள் திட்டமிட்டு பிரசார யுத்தியை கையாளுகின்றனர்.
***