ADDED : அக் 19, 2026 07:01 PM

பொது சட்டம் அவசியம்!
நாடு முழுதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படாததால், பெரிதும் பாதிக்கப்படுவது முஸ்லிம் பெண்கள் தான். பலதார மணம் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண இச்சட்டம் அமல்படுத்துவது அவசியம். ஆனால், மிரட்டல் மூலம் அரசை மாற்றிவிடலாம் என நினைப்போர், வங்கதேசம் மற்றும் நேபாளத்தின் நிலையை உற்று நோக்க வேண்டும்.
- ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர், பா.ஜ.,
நேர்மையான தேர்தல்!
ஐரோப்பிய நாடான பிரான்சில் நடக்கும் கலவரத்தை, நம் நாட்டுச் சூழலையும் ஒப்பிடக்கூடாது. இந்தியா, வங்கதேசமும் அல்ல; பிரான்சும் அல்ல; வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக அமைதியான போராட்டங்களையே ஆதரிக்கிறோம். சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்களை மட்டுமே நாங்கள் கோருகிறோம்.
- சசி தரூர்
லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
தேசவிரோத கூடாரம்!
நம் ஜனநாயகத்தை கவிழ்க்க சதி செய்யும், தேசவிரோத சக்திகளின் கூடாரமாக, காங்., மாறியுள்ளது. அக்கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் அரசியல் வாழ்வை துாக்கி நிறுத்துவதே அவர்களின் மறைமுக நோக்கம். பிரதமர் மோடியின் தலைமையிலான, ‘புதிய இந்தியா’வுக்கு, மக்களின் ஆதரவு இருப்பதால், அதை யாராலும் அசைக்க முடியாது.
- சி.ஆர்.கேசவன்
தேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
