ADDED : ஏப் 22, 2026 01:10 AM

அச்சத்தை ஏற்படுத்த முயற்சி! மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜியை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் பா.ஜ., எடுத்து வருகிறது. வாக்காளர்களை விட அதிகளவில் பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்படவில்லை, வாக்காளர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தவே நிறுத்தப்பட்டுள்ளனர். உத்தவ் தாக்கரே தலைவர், உத்தவ் தாக்கரே சிவசேனா
கெஜ்ரிவால் அடாவடிக்காரர்! மதுபான கொள்கை முறைகேடு வழக்கை விசாரிக்கும் டில்லி உயர் நீதிமன்ற பெண் நீதிபதி ஸ்வர்ணா காந்த சர்மாவுக்கு அழுத்தம் கொடுக்க அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சித்தார். அதற்கு நீதிபதி அடிபணியவில்லை. தற்போது அவரை பற்றி கெஜ்ரிவால் அவதுாறு பரப்புகிறார். கெஜ்ரிவால் அடாவடிக்காரர் போல செயல்படுகிறார். பன்சூரி ஸ்வராஜ் லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
தனிநபர் மசோதா! தற்போதைய மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில், ஓ.பி.சி., மற்றும் முஸ்லிம் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்து தெளிவான விளக்கங்கள் இல்லை. இதுவே இந்த சட்டத்தின் மிகப்பெரிய குறைபாடு. இதை சரி செய்ய, பார்லி.,யில் தனிநபர் மசோதாவை கொண்டு வருவோம். அதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. தர்மேந்திர யாதவ் லோக்சபா எம்.பி., சமாஜ்வாதி கட்சி
