ADDED : பிப் 21, 2024 03:21 AM

புதுடில்லி :
ராஜ்யசபாவில் 15 மாநிலங்களில் இருந்து, 56 எம்.பி.,க்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரலுடன் முடிவடைகிறது.
இதற்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்., 27ல் நடக்கிறது. இந்நிலையில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா குஜராத்தில் இருந்தும், காங்., முன்னாள் தலைவர் சோனியா ராஜஸ்தானில் இருந்தும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
முதன்முறை
அவர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சோனியா போட்டியின்றி தேர்வானார். 1999 முதல் லோக்சபா எம்.பி., ஆக பதவி வகித்து வந்த அவர், முதல் முறையாக ராஜ்யசபா எம்.பி., ஆகி உள்ளார்.அவருடன் பா.ஜ.,வைச் சேர்ந்த இருவரும் ராஜஸ்தானிலிருந்து போட்டிஇன்றி தேர்வாகினர்.
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி., ஆக போட்டியின்றி தேர்வானார். அவருடன் மேலும் மூன்று பா.ஜ.,வினரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பல்வேறு மாநிலங் களில் இருந்து மொத்தம் 41 ராஜ்யசபா எம்.பி.,க்கள் நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டியின்றி தேர்வு
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ராஜ்யசபாவுக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டியின்றி தேர்வானார். இவருடன், பா.ஜ.,விலிருந்து மேலும் மூன்று பேரும், காங்கிரசிலிருந்து ஒருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

