அந்தமான் தீவு கடல்பகுதியில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
அந்தமான் தீவு கடல்பகுதியில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
UPDATED : செப் 27, 2025 04:54 PM
ADDED : செப் 27, 2025 04:40 PM

புதுடில்லி: அந்தமான் தீவுகளின் கிழக்குக் கரையில் இயற்கை எரிவாயு வளம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் எரிசக்தி தேவையில், பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் நிலையை மாற்ற, அந்தமானில் ஆழ்கடல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேடலில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. இதற்காக, ஓ.என்.ஜி.சி., நிறுவனம், எண்ணெய் மற்றும் எரிவாயுவை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வர, ஆழ்துளையிடும் பணியில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில், அந்தமான் தீவுகளின் கிழக்குக் கரையில் இயற்கை எரிவாயு வளம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அந்தமான் தீவுகளின் கிழக்குக் கரையில் இருந்து 17 கிமீ தொலைவில், 295 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விஜயபுரத்தில் இருக்கும் 2 ஆய்வுக் கிணற்றில் இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த ஆய்வுக் கிணற்றில் 2,212 - 2,250 மீட்டர் ஆழத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், இயற்கை எரிவாயு இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட எரிவாயு மாதிரிகள் கப்பல் மூலம் காக்கிநாடாவுக்கு கொண்டு செல்லப்பட்டு சோதிக்கப்பட்டன. அதில் 87% மீத்தேன் இருப்பது கண்டறியப்பட்டது.
வரும் மாதங்களில் இந்த எரிவாயு களத்தின் அளவு மற்றும் வணிக சாத்தியம் குறித்து ஆய்வு செய்யப்படும். ஆனால் அந்தமான் படுகையில் ஹைட்ரோகார்பன்கள் இருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானது. வடக்கே மியான்மரில் இருந்து தெற்கே இந்தோனேசியா வரையிலான முழுப் பகுதியிலும் இருப்பதைப் போலவே, அந்தமான் படுகையிலும் இயற்கை எரிவாயு இருப்பது பற்றிய நமது நீண்டகால நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.
குடியரசு தினத்தில் பிரதமர் மோடி அறிவித்த ஆழ்கடல் திட்டத்தின் கீழ், புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து நமது ஹைட்ரோகார்பன் இருப்புகளை முழுமையாக பயன்படுத்துவதற்காக, நமது கடல்வழிப் படுகைகளில் அதிக எண்ணிக்கையிலான ஆழ்கடல் ஆய்வுக் கிணறுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு, பெட்ரோப்ராஸ், பிபி இந்தியா, ஷெல், எக்சான் மொபில் போன்ற உலகளாவிய ஆழ்கடல் ஆய்வு நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து நமது ஆய்வுப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல உதவும். அம்ரித் கால் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.