ADDED : டிச 26, 2025 01:23 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் நவி மும்பை விமான நிலையத்தை, கடந்த அக்டோபர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
ஐந்து கட்டங்களாகக் கட்டப்படும் இந்த விமா ன நிலையத்தின் முதல் கட்டப் பணிகள், 19,650 கோடி ரூபாய் செலவில் மேற் கொள்ளப்பட்டது. ஆண்டுக்கு 9 கோடி பயணியரை கையாளும் திறன் படைத்த இந்த விமான நிலையத்தை, நவி மும்பை சர்வதேச விமான நிலையம் லிமிடெட் என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
இதில் அதானி குழுமத்திற்கு, 74 சதவீத பங்கும், மீதமுள்ள 26 சதவீதம், 'சிட்கோ' நிறுவனத்திற்கும் சொந்தமானது. இந்நிலையில், இந்த விமான நிலையத்தில் பயணியர் விமான சேவை நேற்று முதல் துவங்கியது.
காலை 8:40 மணிக்கு, 'இண்டிகோ' நிறுவனத்தின் விமானம் தெலுங்கானாவின் ஹைதராபாதிற்கு புறப்பட்டபோது, தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல் நாளில், 'இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர், ஸ்டார் ஏர்' ஆகிய நிறுவனங்கள் ஒன்பது இடங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளை இயக்கின.
ஆரம்ப கட்டத்தில், இந்த விமான நிலையம் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை என மொத்தம் 12 மணி நேரம் செயல்படும் என, விமான நிலைய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

