UPDATED : ஆக 05, 2025 09:35 AM
ADDED : ஆக 05, 2025 03:07 AM

ஜி.பி.எஸ்., 'குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்...' இது இல்லாவிட்டால், 'கூகுள் மேப்' வேலை செய்யாது. புதிய இடத்திற்கு செல்ல, இந்த ஜி.பி.எஸ்., தான் நமக்கான வழிகாட்டியாக இருக்கிறது.
ஆனால், இது சுதேசி அல்ல; அமெரிக்காவின் கண்டுபிடிப்பு. ஒட்டுமொத்த உலகத்தையும் மேலிருந்து கழுகு பார்வையில் சுருக்கி, நம் உள்ளங்கையில் தரும் அதிநவீன தொழில்நுட்பம்.
சமீபத்தில் கூட ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா குண்டு மழை பொழிந்தது. அப்படியொரு துல்லியமான தாக்குதலுக்கு வழிவகுத்ததே இந்த ஜி.பி.எஸ்., தான். ராணுவத்துக்காக பிரத்யேக ஜி.பி.எஸ்., சேவையையும் அமெரிக்கா வைத்திருக்கிறது.
சரி, இப்போது நம் நாட்டுக்கு வருவோம். 1999ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரை அவ்வளவு எளிதாக நாம் மறந்துவிட முடியாது. அந்த போரில் ஜெயிக்க இந்தியா, அமெரிக்காவிடம் உதவி கேட்டது; ஆயுதங்களையோ, நவீன போர் கருவிகளையோ கேட்கவில்லை.
ராணுவத்துக்கான ஜி.பி.எஸ்., வசதியை தான் கேட்டது. எதிரிகளின் நடமாட்டத்தை அறிந்து கொள்வதற்காக கேட்டபோது, அமெரிக்கா முகத்தில் அடித்தாற்போல, 'முடியாது' என கூறி மறுத்துவிட்டது. அப்போது தான், இந்திய அதிகாரிகளுக்கு சுளீரென உறைத்தது. நமக்கென்று தனியான ஜி.பி.எஸ்., வசதி வேண்டும் என புரிந்தது. உலக நாடுகள் இப்படி தங்களுக்கென்று பிரத்யேக ஜி.பி.எஸ்., வைத்திருப்பது புதிதல்ல.
அமெரிக்காவுக்கு ஜி.பி.எஸ்., ரஷ்யாவுக்கு குளோனஸ், ஐரோப்பாவுக்கு கலிலியோ, சீனாவுக்கு பெய்டோ, ஜப்பானுக்கு க்யூ.இசட்.எஸ்.எஸ்., என்ற பெயர்களில், 'நேவிகேஷன் சிஸ்டம்' இருக்கின்றன.
அப்படி இந்தியாவுக்கான நேவிகேஷன் சிஸ்டம் தான், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., எனப்படும், 'இந்திய பிராந்திய நேவி கேஷன் சாட்டிலைட் சிஸ்டம்' தற்போது இந்த பெயர் 'நேவ்ஐசி' என சுருக்கப்பட்டு விட்டது.
அப்படியெனில், இனி இந்தியாவும் ராணுவ ரீதியாக எதிரிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கணிக்க முடியுமா? நேவ்ஐசி தரும் தகவல்களை வைத்து, எதிராளிகளை மண்டியிட வைக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
ஆனால், அதற்கான பதில் தற்போதைக்கு இல்லை. இது குறித்து, குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள, 'இஸ்ரோ'வின் 'ஸ்பேஸ் அப்ளிகேஷன்' மையத்தின் இயக்குநர் நிலேஷ் எம்.தேசாய் கூறியதாவது:
கார்கில் போருக்கு பின் ஆரம்பிக்கப்பட்டது தான் நேவ்ஐசி. இதற்காக, 2013 ஜூலையில் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. கடந்த 12 ஆண்டுகளில், 11 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு இருக்கின்றன. இவற்றில் கசப்பான உண்மை என்னவெனில், சில செயற்கைக்கோள்கள் சரியாக வேலை செய்யவில்லை; சில செயற்கைக்கோள்களின் ஆயுள் காலம் முடியும் நிலையில் இருக்கின்றன.
ஆகவே, நேவ்ஐசி சேவையை தற்போதைக்கு தொடர முடியாத சூழலில் நாம் இருக்கிறோம். அதே சமயம், அடுத்த சில ஆண்டுகளில் நேவ்ஐசி பற்றிய நிறைய செய்திகளை நிச்சயம் நம்மால் கேட்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'அடாமிக் கிளாக்' அட்சயரேகை, தீர்க்கரேகை, உயரம் மற்றும் காலம் என நான்கு அம்சங்களை ஒருங்கிணைத்தால் மட்டுமே, பூமியின் நிலப்பரப்பை நிகழ்நேரத்தில், '3டி' வடிவில் தெளிவாக படம் எடுத்து அனுப்பி வைக்க முடியும்.
எனவே, நேவிகேஷன் சிஸ்டம் துல்லியமாக வேலை செய்ய, ஒவ்வொரு அம்சத்துக்கும் தனித்தனியாக செயற்கைக்கோள்கள் தேவை. அந்த வகையில் நான்கு செயற்கைக்கோள்கள், 24 மணி நேரமும் வினாடி தவறாமல் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இதற்காக தான் இந்தியா, 11 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது. யார் கண்பட்டதோ தெரியவில்லை. இன்றைய தேதியில் நான்கு செயற்கைக்கோள்கள் மட்டுமே வேலை செய்கின்றன; மற்றவை நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் இல்லை. இதனால், வெறுமனே தகவல்களை அனுப்பவும், பெறவும் மட்டுமே இந்த செயற்கைக்கோள்களை இஸ்ரோ இன்று வரை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
வேலை செய்யும் நான்கு செயற்கைக்கோள்களிலும் ஒரு மிகப் பெரிய பிரச்னை தற்போது உருவாகி இருக்கிறது. அது, 'அடாமிக் கிளாக்' எனப்படும் அணு கடிகாரத்தின் தோல்வி. பல லட்சம் ஆண்டுகள் இயக்கத்துக்கு பிறகே, 1 வினாடி நேரத்தை குறைத்து காட்டும். அந்த அளவுக்கு நேரத்தை காட்டுவதில் துல்லியம் தவறாது. சுவிஸ் நாட்டின் தயாரிப்பு. ஐரோப்பாவின் கலிலியோ நேவிகேஷன் சிஸ்டத்துக்காக, அதன் செயற்கைக்கோள்களில் இந்த கடிகாரமே பொருத்தப்பட்டு இருக்கின்றன.
ரூபிடியம் அணு அலை வரிசை தரநிலை கொண்ட இந்த கடிகாரங்கள் விலை மிக மிக அதிகம். உயர் செயல்திறனுடன், விண்வெளிக்கு ஏற்ற அலைவரிசைகளுடன் இவை தயாரிக்கப்படுகின்றன.
நேவிகேஷன் சிஸ்டத்துக்கு இந்த அணு கடிகாரங்கள் மிக மிக முக்கியமானவை என்பதால், அமெரிக்கா, ஐரோப்பாவை போல, இந்தியாவும் சுவிஸ் நாட்டிடம் இருந்தே ரூபிடியம் அணு அலை வரிசை தரநிலை கடிகாரங்களை கொள்முதல் செய்தது.
விண்ணில் 36,000 கி.மீ., தொலைவில் நிலை நிறுத்தப்படும் செயற்கைக்கோளில் இவை பொருத்தப்பட்டிருக்கும். அவ்வளவு துாரத்தில் இருந்தாலும், 5 அல்லது 10 மீட்டர் என்ற லேசான பிழையுடன் நேவ்ஐசிக்கு நேரத்தை காட்டும்.
அதை வைத்து, செயற்கைக்கோளின் நிலையை மாற்றி வரைபடங்களை படம் பிடிக்க முடியும். தற்போது இந்த அணு கடிகாரங்கள் ஓடாதது தான் பிரச்னையே. இன்றைய தேதியில் விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கும் நம் நான்கு செயற்கைக்கோள்களிலும் சுவிஸ் கடிகாரம் தான் பொருத்தப்பட்டு இருக்கிறது.
அந்த நான்கில், ஒரு செயற்கைக்கோளில் இருக்கும் அணு கடிகாரம் இறுதி இயக்கத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது நின்றுவிட்டால் அவ்வளவு தான், மொத்த நேவ்ஐசி சிஸ்டமும் படுத்துவிடும்.
சுதேசி கடிகாரம் அணு கடிகாரங்களின் தோல்வி, இந்தியாவின் நேவ்ஐசி செயற்கைக்கோள்களை இயங்க விடாமல் செய்திருக்கிறது. இதற்கான முக்கிய காரணத்தை இஸ்ரோ ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறது. அது, மிக முக்கியமான தொழில்நுட்ப தகவல் என்பதால், தேசத்தின் விஞ்ஞான நலனை கருதி அதை வெளியிடவில்லை.
'இது, இந்தியாவின் தோல்வியல்ல; சுவிஸ் நாட்டின் கடிகாரத்தை நம்பியதால் ஏற்பட்ட தோல்வி' என, பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரோவின் முன்னாள் இன்ஜினியர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துஇருக்கிறார்.
'கலிலியோ செயற்கைக்கோள் தொகுப்பிலும் இந்த தோல்வி நிகழ்ந்திருக்கிறது. ஆனால், நம்மை போல அல்லாமல் புது ரத்தம் பாய்ச்சுவது போல, உடனடியாக 'கலிலியோ' செயற்கைக்கோள் தொகுதிக்கு புது அணு கடிகாரம் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவப்பட்டுவிடும்.
'இது பழுதடைந்த கடிகாரம் கொண்ட செயற்கைக்கோளுக்கு மாற்றாக வேலை செய்ய ஆரம்பித்து விடும். ஆனால், நம்மிடம் அந்த மாற்று ஏற்பாடு இல்லை. உடனடியாக மாற்று செயற்கைக்கோள்களை ஏவும் திறனை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்கிறார் அந்த முன்னாள் இன்ஜினியர்.
எனவே, இந்தியாவின் நேவ்ஐசி நேவிகேஷன் சிஸ்டம் புத்துயிர் பெற, சுவிஸ் கடிகாரத்திற்கு பதில் நாமே சுதேசியாக கடிகாரத்தை தயாரிக்க வேண்டும். உள்நாட்டிலேயே அது தயாரிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, இதற்காக தேசிய அளவிலான திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் அந்த இன்ஜினியர்.
ஆனால், இந்த யோசனைக்கு முன், அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பே அணு கடிகார தயாரிப்பில் இந்தியா இறங்கிவிட்டது. 2023ல், 'என்.வி.எஸ்., 01' செயற்கைக்கோளில் பொருத்தப்பட்ட நான்கு அணு கடிகாரங்களில், ஒன்று உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. அது தான், அந்த செயற்கைக்கோளில் முதன்மை கடிகாரமாகவும் இடம் பெற்றிருந்தது. அதே போல், 'என்.வி.எஸ்., 02' செயற்கைக்கோளிலும் இந்தியாவின் சுதேசி கடிகாரமே பொருத்தப்பட்டது.
அந்த கடிகாரங்களின் இயக்கம் தற்போது திருப்திகரமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், நேவ்ஐசிக்காக இனி ஏவப்படும் அனைத்து செயற்கைக்கோள்களிலுமே, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி அணு கடிகாரங்கள் இடம் பெறவுள்ளன.
விண்வெளி துறையை பொருத்தவரை வெற்றிக்கு கூட்டு முயற்சி அவசியம். நேவ்ஐசிக்காக தேசிய திட்டம் தேவை. இன்ஜின்கள் முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் வரை ஒருங்கிணைப்பு வேண்டும். சுருக்கமாக சொல்வதென்றால், இந்த திட்டத்திற்கு அரசு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிறார், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி.
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஜி.பி.எஸ்., இல்லாவிட்டால் தற்போது எந்தவொரு செயலியும் இயங்காது. வாடகை கார்கள் முதல், பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுக்கும் டெலிவரி செயலிகள் வரை எதுவுமே இயங்காது. வெளிநாட்டு உள்கட்டமைப்பு கொண்ட தொழில்நுட்பத்தை நம்பி இருந்தால், ஒரு நாள் திடீரென இந்த கற்பனை உண்மையாகி விடக் கூடும். ஆகவே, அந்த சிக்கலில் இருந்து நம் தேசம் விடுபட வேண்டும்.