திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா; முன்னுதித்த நங்கை சிலை புறப்பாடு
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா; முன்னுதித்த நங்கை சிலை புறப்பாடு
ADDED : அக் 01, 2024 05:36 AM

நாகர்கோவில், : இன்று பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை சிலை நேற்று புறப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கிய பத்மனாபபுரத்தில் மன்னர் காலத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாளடைவில் நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட பின்னரும் இங்கிருந்து சுவாமி சிலைகள் திருவனந்தபுரம் எடுத்துச் செல்லப்பட்டு நவராத்திரி விழா நடக்கிறது.
அக்.,4ம் தேதி நவராத்திரி விழா தொடங்குவதையொட்டி இன்று காலை பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து நவராத்திரி பவனி புறப்படுகிறது. இதற்காக சுசீந்திரத்திலிருந்து முன்னுதித்த நங்கை சிலை பல்லக்கில் எடுத்து செல்லப்பட்டது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் வெளியே கொண்டுவரப்பட்ட தேவி சிலைக்கு தமிழகம், கேரளா போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். இதில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, எம்.எல்.ஏ.,க்கள் தளவாய் சுந்தரம், எம்.ஆர்., காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சுசீந்திரம் கோயிலை வலம் வந்த பின்னர் நாகர்கோவில் பார்வதிபுரம், சுங்கான்கடை வழியாக குமாரகோவில் சென்றடைந்தது. இன்று காலை இங்கிருந்து வேளிமலை முருகன் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை சிலையும் புறப்பட்டு பத்மநாபபுரம் வந்தடையும். தொடர்ந்து இங்கிருந்து நவராத்திரி பவனி புறப்படுகிறது.