சத்தீஸ்கரில் நக்சல் ஆதிக்கத்திற்கு விரைவில் முடிவு; முகாம் அமைத்தது பாதுகாப்பு படை
சத்தீஸ்கரில் நக்சல் ஆதிக்கத்திற்கு விரைவில் முடிவு; முகாம் அமைத்தது பாதுகாப்பு படை
ADDED : பிப் 06, 2025 10:13 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், நக்சல்களின் முக்கிய இடமாக கருதப்படும் குதுல் பகுதியில் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு போலீசார் புது முகாம் அலுவலகம் அமைத்து உள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்த நக்சல்களின் ஆதிக்கம், பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கை காரணமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  அவர்களின் பிடியில் இருந்த பல பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் சில பகுதிகளில் அவர்களின் நடமாட்டம் உள்ளது.  நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சல் செயல்பாடு உள்ளது. இங்கு குதுல் என்ற நகர் உள்ளது.  அபுஜ்மத் என்ற பிராந்தியத்தில் செயல்படும் நக்சல்கள் இந்நகரை தங்களின் தலைமையிடமாக வைத்து இருந்தனர்.
இந்நிலையில், இந்நகரில் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு போலீசின் 41வது பட்டாலியன் இங்கு முகாம் அலுவலகம் அமைத்து உள்ளனர்.  இதன் மூலம், இங்கு நக்சல்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவதுடன், 2026க்குள் நக்சல் அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு பக்கபலமாக இருக்கும் என ஐடிபிஎப் அமைப்பு கூறியுள்ளது.

